மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகா சந்நிதானம் அருள்வரலாறு

மதுரை ஆதீன 293 ஆவது குருமகா சந்நிதானமாக ஞானபீடத்தில் எழுந்தருள உள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருள் வரலாற்றை குருவாரமான இன்று சுருக்கமாக சிந்திப்போமா…

பூர்வாசிரம பெற்றோர் இட்ட இயற்பெயர் பகவதி லட்சுமணன்.

பெற்றோர்கள் பெயர்
திரு.காந்திமதிநாதன் பிள்ளை
திருமதி.ஜானகி அம்மாள்

பிறந்த ஊர்
திருநெல்வேலி டவுன்

பிறந்த தேதி : 25.03.1954

சிறு வயதிலேயே கல்வி கேள்வி சைவ சமயத் தொண்டில் சிறந்து விளங்கிய சுவாமி அவர்கள்
குன்றக்குடி ஆதீனத்தில் 1975 ஆம்
ஆண்டு 21 ஆவது அகவையிலேயே
ஸ்ரீமத் ஆறுமுகத்தம்பிரான் என்ற திருநாமத்தோடு குன்றகுடி முருகன் ஆலய கட்டளை தம்பிரானாக துறவறத்தை தொடங்கினார்கள்.

குன்றகுடி ஆதீனத்தில் இரண்டாண்டுகளும்,தருமபுரம் ஆதீனத்தில் 1976 ஆம் ஆண்டு முதல் 1980 வரை ஐந்து ஆண்டுகள் ஸ்ரீமத் நெல்லையப்ப தம்பிரானாக சமயத் தொண்டாற்றினார்கள்.

பின்பு 1980 இல் இருந்து 2019 வரை
திருவாவடுதுறை ஆதீனத்தில் 39 ஆண்டுகள் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் 23 ஆவது குருமகா சந்நிதானம் மற்றும் தற்போது அருளாட்சி புரிந்துவரும் 24 ஆவது குருமகா சந்நிதானம் வரை குருபக்தியில் மிகுந்து அவர்களின் கட்டளை படி காஞ்சிபுரம் மற்றும் ஏனைய கிளை மடங்களில் மூத்த தம்பிரானாக சமயத் தொண்டும், சைவ தொண்டும் ஆற்றினார்கள்.

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இவர்களை இளவரசு சுவாமிகளாக நியமிக்க திருவுளம் பற்ற
திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது
ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் திருமுன்னர் 06.06.2019 குருவாரம் அன்று இளைய சந்நிதானமாக நியமிக்கப்பட்டு ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் என திருநாமம் சூட்டியருளினார்கள்.

மதுரை ஆதீன 292 ஆவது குருமகா சந்நிதானம் பரிபூரணமான பின்
13.08.2021 அன்று தருமை ஆதீன 27 ஆவது ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமணிகள் ஞானாசிரிய அபிஷேகம் செய்வித்து கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293 ஆவது குருமகா சந்நிதானமாக நியமனம் செய்வித்தார்கள்.

எதிர் வரும் 23.08.2021 திங்கட்கிழமை
அன்று அனைத்து ஆதீனங்கள் திருமுன்னிலையிம் ஞானபீடாரோஹண விழாவானது சிறப்புற நடைபெற உள்ளது.

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.