வடமாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ.. பரிதாபங்கள் யூ டியூப் சேனலுக்கு ஆபத்தா..?

பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து நகைச்சுவையான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றவர்கள் கோபி, சுதாகர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து இவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ மிகவும் டிரெண்டானது. அதில், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும் இருவரும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது. இதனால், பிரபல யூ டியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூ டியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வட மாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.