ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா கடந்து வந்த பாதை

 

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த 1ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

 

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

இதனிடையே தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் கடந்த நவம்பர் மாதம் காலவதியானது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், கடந்த 1ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில், 4 மாதம் 11 நாட்கள் கழித்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இந்த விவகாரம் வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது

எனவே, சட்டப்படி இந்த மசோதா எப்படி சாத்தியமாகும் என்றும் தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா போன்று, மீண்டும் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.