Pachaiyappar

மார்ச் – 31, பச்சையப்பரின் 227 ஆவது நினைவு தினம்

வரலாற்றில் பல புதிய பக்கங்களுக்கு ‘வெளிச்சம்’ தந்தது இந்தக் கல்லூரி. ஆனால் இதன் கதை ‘கருப்பர்’ நகரத்தில் இருந்து தொடங்குகிறது.!

பச்சையப்பன் கல்லூரி கல்வி வரலாற்றில் மட்டுமல்ல, அரசியல் வரலாற்றிலும் அதற்கான இடம் தனி! இதைவிட இதனை உருவாக்கியவரின் வாழ்வு சொல்லும் வரலாறு மிகவும் சுவையானது.

தென் இந்தியாவிலே பிரித்தானியரின் நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் கல்லூரி! தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா, மைசூர் மாநில முன்னாள் முதல்வர் கே.சி.ரெட்டி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் காசு பிரமானந்த ரெட்டி,

மக்களவைத் தலைவர் ஆனந்தசயனம் அய்யங்கார், கணித மேதை ராமானுஜம், பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களையும், மொழிப் போர் தியாகிகளையும் தேசத்திற்குத் தந்து அரசியல் வரலாற்றில் ஒரு புது அத்தியாத்தைத் தொடங்கியது!

இது இந்தக் கல்லூரியின் வரலாறு அல்ல, இதனைத் தொடங்கி வைத்தவரின் வரலாறு. ஆம்! 267 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது!

தன் கணவர் விசுநாத முதலியார் திடீர் என மரணம் அடைந்ததும் சிறு வீட்டையும் சிறிய விவசாய நிலத்தையும் விற்று அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு பூச்சியம்மாள் மனதில் குழப்பத்தையும், கண்களில் பயத்தையும், வயிற்றில் ஒரு உயிரையும் சுமந்து கொண்டு, கூடவே சுப்பம்மாள் அச்சம்மாள் என்ற தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் இருந்து பெரியபாளையம் வருகிறார்.

பெரும் செல்வந்தரான தம் குடும்ப நண்பர் ரெட்டிராயர் உதவுவார் என்ற நம்பிக்கை!

ரெட்டிராயர் அப்போது ஆற்காடு சுபேதாரின் காரியக்காரராக (Faujdar of Periyapalayam) இருந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவரும் அடைக்கலம் தந்தார்.

அப்போது, அதாவது 1754 இல் பூச்சியம்மாளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. கணவன் இறந்த சில நாட்களிலேயே மகன் பிறந்தது பூச்சியம்மாளுக்கு ஆறுதல். அந்தக் குழந்தைக்கு கணவனின் குலதெய்வம் பச்சையம்மாள் என்பதால் பச்சையப்பன் என்று பெயர் வைக்கிறார்.

வறுமையும் – வாழ்வின் இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருந்தது. பச்சையப்பனுக்கு ஐந்து வயதான போது, ஆதரவாக இருந்த ரெட்டிராயர் திடீரென இறந்து விடுகிறார். இருள் அவர்களை மேலும் இறுக்குகிறது!.

உயிர் வாழச் சிறிது வெளிச்சமாவது வேண்டாமா? பூச்சியம்மாள் திசை தெரியாது தவிக்கிறார். திடீர் என்று அவர் மனதில் ஒரு சுடர்! ஒரு கணம் தான். பௌனி நாராயணப் பிள்ளையின் நினைவு வருகிறது.

இவரும் குடும்ப நண்பர் தான். சென்னையில் இருக்கிறார். தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் சென்னையை நோக்கி நடக்கிறார். வாடி, வதங்கிப் போய் கிடக்கும் தன் ஆசை மகன் பச்சையப்பன் முகத்தைப் பார்க்கிறார்.

அவர் கண்கள் கலங்குகின்றன. “குடிக்க கஞ்சியும் – படிக்க வாய்ப்பும் இல்லாமல் இந்தப் பிஞ்சு இப்படி வதங்கிக் கிடக்கிறதே என்ற வேதனை! அழுத கண்ணீரோடு வெயிலில் நடக்கிறார்!

“எதிர்காலத்தில் நல்ல உயரமும், சிவந்த நிறமும், அகன்ற நெற்றியும், பரந்த மார்பும் கொண்டு, மஸ்லின் துணியிலான நீண்ட அங்கி அணிந்து, அலங்காரமான மேலங்கியும், காதில் பெரிய தங்க வளையமும், எமரால்டு கடுக்கனும், வைரம் பதித்த காப்பும், மிகவும் நீண்ட ரத்தின மாலையும்,

மராட்டியர் அணியும் தலைப்பாகையும் அணிந்து, பல்லக்கில் பவனி வந்து பல லட்சக்கணக் காணவர்களுக்கு வயிற்றுப் பசிக்கு உணவும், அறிவுப் பசிக்கு கல்வியும், வாழ்வுக்கு அறச்செயல்களையும் வழங்கும் வள்ளலாகத் திகழப் போகிறான் தன் மகன் என்று தெரியாமலே – வறுமையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் பூச்சியம்மாள்!

“வரலாற்றின் குணமே இப்படித்தான், அது ஒரு போதும் நேர் கோட்டில் நடந்ததில்லை!

பூச்சியம்மாள் சென்னையில் பௌனி நராயணப் பிள்ளையின் ஆதரவில் தன் மகன் பச்சையப்பன் இரண்டு மகள்களுடன் சென்னை கோட்டைக்கு மேற்கே ஒற்றைவாடை சாமி மேஸ்திரி தெரு என்ற குறுகிய சந்தில் குடியேறுகிறார்.

இதன் பிறகு தான் பச்சையப்பரின் வாழ்வில் புது அத்தியாயம் பூக்கிறது.. பௌனி நாராயணப் பிள்ளை கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். அவருக்கு நல்ல செல்வாக்கு! நல்ல வசதி!

பச்சையப்பருக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு கற்றுக் கொடுத்தார். கூடவே சிறிது தொழில் வித்தை, அவரும் அதைத் தாகத்தோடு பெற்றுக் கொண்டார்.

முதலில் பச்சையப்பருக்கு ஒரு பீங்கான் கடையில் தான் வேலை. பொருள் வாங்க வரும் ஐரோப்பியர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்! பின்னர் ஆங்கிலேய அதிகாரியான நிக்கல்ஸ் என்பவருக்கு மொழிபெயர்ப்பாளர்.

அந்தப் பணியில் இருந்து கொண்டே கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக உயர்ந்தார். கம்பெனியாரிடம் நல்ல செல்வாக்கு!

மொழிபெயர்ப்பாளராக (துவிபாஷி) மட்டுமல்லாது கம்பெனியின் முகவராகவும் செயல்பட்டார். பல்வேறு வணிகத்திலும் ஈடுபட்டுப் பொருளை ஈட்டினார்.

1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரி வசூல் செய்து நவாபின் அலுவலர்களுக்குச் சம்பளம் வழங்கும் பணியை ஏற்றார். ஆங்கில நிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய வரியை வசூல் செய்து, அதைப் பணமாக்கித் தரும் குத்தகைத் தொழில்.

ஆங்கில வணிகர்களுக்கும் கர்நாடக நவாபு அதிகாரிகளுக்கும் இடையே முகவர் என்று எத்தனையோ உப தொழில்களை அவர் மேற்கொண்டாலும் மதராஸ் மாகாணத்தின் சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்ற நற்பெயரையும் தக்க வைத்துக் கொண்டார்!

தனது 22 ஆவது வயதில் தன் அக்காள் மகள் அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். வாரிசு இல்லாததால் தஞ்சையில் இருந்தபோது பழனியாயி என்பவரை நகைகள் பல அணிவித்து 16 ஆயிரம் வராகன் பரிசும் வழங்கி மறுமணம் செய்தார்.

அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது, ஆனால் அந்த மகிழ்ச்சியை அவரால் அனுபவிக்க முடியாத அளவு முதல் மனைவிக்கும் – இரண்டாம் மனைவிக்கும் ஒரே சண்டையும் – சச்சரவும் தான்.

அது அவர் நிம்மதியை மட்டுமல்ல, உடலையும் கெடுக்கத் தொடங்கி விட்டது.! அது தனிக்கதை! பச்சையப்பர் மீது தஞ்சையில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியர் குற்றம் சுமத்தினர். பின்னர் அதன் மீது விசாரணை நடந்து, பின் தான் நிரபராதி என்று நிருபித்தார்.

பச்சையப்பரின் குடும்ப வாழ்வுதான் சிக்கலாக இருந்ததே தவிர, தொழிலிலும் பொது வாழ்விலும் அவர் தொட்ட உயரம் வியக்க வைக்கிறது.

தனது 28 ஆவது வயதில், ஆங்கில நிறுவனத்தின் முதன்மையான பொறுப்பில் இருந்த இராபர்ட் சோசப் சலிவான் என்பவரின் மொழிபெயர்ப்பாளர் என்ற ஆங்கில அரசுப் பணியை அவர் ஏற்றார்.

இது அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனை. பேரும் புகழும் – செல்வமும் சேர்ந்தன. ஆனால் அவர் தனது பதினாறாவது வயதிலே – பதின் பருவத்திலே ‘வள்ளல்’ என்ற அடையாளத்தைப் பெறும் வகையில் அறப்பணிகளை நடத்தத் தொடங்கி விட்டார்.

அப்போது சென்னை மாகாணத்தின் அடையாளங்களில் ஒன்று பச்சையப்பரின் இல்லம். கோமலீஸ்வரன் பேட்டையில், தற்போதைய சிந்தாதரிப் பேட்டை!

கோவில் வடிவில், அதிகப் பொருட் செலவில் மிகப் பெரிய, ஆடம்பரமான பங்களா ஒன்றைக் கட்டினார். அப்போதைய ஹாரிஸ் சாலை பகுதியில் கூவம் ஆற்றுக்கு இணையாக நீண்ட, அகலமான பாதை தான் பகோடா தெரு. அந்தத் தெருவில் மாளிகை ஒன்றைக் கட்டினார்.

அந்தத் தெருவின் தென் கோடியில் கோமலீஸ்வர் கோயில். அவர் அந்தத் தெருவைத் தேர்வு செய்யக் காரணம் அவருடைய நண்பர்கள் பலர் அப்பகுதியில் வசித்தனர். அவர்களில் குழந்தைவீரப் பெருமாள் பிள்ளை என்ற செல்வந்தர் மிகவும் நெருக்கமானவர்.!

கோவில் வடிவான அந்த இல்லத்தை தன் காலத்திற்குப் பின்பு பொதுமக்களின் பொது வழிபாட்டுக் கோயிலாக மாற்றிவிட வேண்டும் என்பது தான் அவரின் விருப்பம்!. இது தவிர அவருக்கு தஞ்சை, கும்பகோணங்களில் பங்களாக்கள் இருந்தன,

பச்சையப்பர் தினமும் கூவம் ஆற்றில் நீராடிவிட்டு, கோமலீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்று அவர் கருதியது ஆன்மீகமும் அறப்பணிகளும் தான்.

தேவாரம், திருவாசகம், மற்றும் பிற சைவப் படைப்புகளைக் கேட்டு, அனுபவித்து வந்தார். இரவில் சிவ பக்தர்களை வீட்டுக்கு அழைத்து வந்து கதை கேட்பது அவரின் வழக்கம்.

தன் வீட்டில் ஏழைகளுக்கும் சிவ பக்தர்களுக்கும் தினமும் உணவு வழங்கி மகிழ்ந்தார். தானமாக வழங்கும் உணவு தானே என்று அவர் நினைக்காமல் தனக்கு சமைக்கும் உணவின் தரத்தினையே தானமாக வழங்கும் உணவு விஷயத்திலும் கடைபிடித்தார்.!

பச்சையப்பர் கோமலீஸ்வரன் பேட்டை மாளிகையில் நீண்டகாலம் தங்க முடியவில்லை!. பங்களா கட்டிய ஓராண்டிற்குள் மெட்ராஸ் ஆளுநர் சர் ஆர்ச்பெல் காமல் உத்தரவின் பேரில் 1784 வாக்கில் பிரிட்டிஷ்சாரின் திட்டங்களை மேற்பார்வையிட, வரி வசூலிக்க, தஞ்சாவூருக்குக் குடியேறினார்.

அங்கு சென்றதும் தஞ்சாவூர் மகாராஜா அமர்சிங்கிற்கு பிரிட்டிஷ் அரசால் தொல்லை வராமல் பாதுகாத்ததுடன் அவ்வப்போது அவருக்கு கடனுதவியும் செய்து வந்தார்.!

இந்த நன்றியை மறவாத அரசர் அமர்சிங் பச்சையப்பர் உடல் நலிவுற்று இருந்தநிலையில் அவர் கும்பகோணம் செல்லவும் பின்பு திருவையாறு செல்லவும் உதவினார். அவர் மறைவிற்குப் பின்பும் அவர் குடும்பத்திற்கு உதவியாக இருந்தார்.

பச்சையப்பரின் நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று கும்பகோணத்தில் மக்களுக்காக ஒரு சத்திரம் கட்டித் தரவேண்டும் என்பது. அதற்கான பணியைத் தொடங்கினார். அவர் நினைத்த வேகத்திற்குப் பணிகள் நடைபெறவில்லை.

எனவே கும்பகோணத்திற்கே சென்று தங்கினார். அவருக்கு இன்னும் ஒரு ஆசை! தன் இறுதி மூச்சு திருவையாற்றில் முடிய வேண்டும் என்பது.

காலத்தின் வேலையோ என்னவோ அவர் கும்பகோணம் வந்து சேர்ந்த நேரம் அவர் உடல்நிலை மோசமானது, இரண்டு மனைவிமார்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது, அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. வெளியே புகழோடு இருந்தாலும் உள்ளே புழுக்கத்தோடு தான் இருந்தார்.

உடல் நலம் நாளுக்கு நாள் நலிவுற்றுக் கொண்டே சென்றது. “தான் மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” என்பதை அவர் மனம் உணரத் தொடங்கியது.

அவர் இறப்பதற்கு முன்பு அதாவது மார்ச் 31, 1794 – க்கு முன்பு மார்ச் 22 அன்று ஒரு உயில் எழுதினார்.

“தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்த சொத்து போக மீதியைக் கல்வி – மற்றும் அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை பௌனி நாராயணப் பிள்ளை நிர்வகிக்க வேண்டும் என்று அந்த உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த காலக் கட்டத்தில், இதுபோன்று யாரும் உயில் எழுதி வைத்ததாகத் தகவல் இல்லை!.

பச்சையப்பர் இறக்கும் போது அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் பகோடாக்கள், அதாவது மூன்றரை லட்சம்! அவரது மரணத்திற்குப் பின்பு அவரது உறவுகளும், பிறரும் அந்த சொத்துக்கு உரிமை கோரி, சட்டப் போர் செய்தார்கள்.

பச்சையப்பரின் பங்களா பலராலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. நீதிமன்றம் சீல் வைத்த வீட்டை உடைத்து, நகைகளையும், ஆபரணங்களையும், சேமிப்பில் இருந்த பணத்தையும் பலரும் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூட கூறப்பட்டது.

ஓராண்டு, ஈராண்டு அல்ல ஐம்பது ஆண்டுகாலம் நீண்டது அந்தச் சட்டப் போராட்டம்!

பச்சையப்பரின் விருப்பத்தின் படி அவர் உயிலில் குறிப்பிட்டபடி, காரியங்கள் நடத்த வழக்கறிஞர்கள் ஜெனரல் சர்.ஹெர்பட் காம்ப்டன், மெட்ராஸ் பிரிசிடென்சியின் அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் புரூஸ் நார்ட்டன் பெருமுயற்சி எடுத்தனர்.

அதன் பின்னர் தான் பச்சையப்பர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அப்போது பச்சையப்பரின் சொத்து மதிப்பு 8 லட்சமாக உயர்ந்தது.

அதில் மூன்றரை லட்சம் கோயில் மற்றும் தர்ம பணிகளுக்காகவும், மீதம் கல்வி வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது!

கருப்பர் நகரத்தில் (தற்போதைய சென்னை பிராட்வே) பச்சையப்பன் நடுவ நிறுவனம் (Pachyaiyappas Central Institution) 1842 இல் தொடங்கப்பட்டது. (அப்போது ஆசியாவிலே மிகப்பெரிய அறக்கட்டளை பச்சையப்பர் அறக்கட்டளை தான்).

பின்னர் அது 1850 இல் தற்போது இருக்கும் இடத்தில் பச்சையப்பன் கல்லூரியாக உயர்ந்தது. பச்சையப்பன் கல்லூரியின் தொடக்க விழா பச்சையப்பன் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அப்போது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அந்த நாள் மெட்ராஸ் பிரசிடென்ஸியின் முக்கியமான நாளாகத் திகழ்ந்தது.! அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் கல்லூரியைத் தொடங்கி வைக்க, ஏராளமான இந்திய மற்றும் ஐரோப்பியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட மிகப் பிரமாண்டமான விழாவாக அது அமைந்தது.!

பச்சையப்பர் வழங்கிய நிதியில் அமைக்கப்பெற்ற அறக்கட்டளையின் தற்போதைய சொத்து மதிப்பு 900 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு தரும சத்திரங்கள் இப்போதும் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் பல ஆலயங்களில் திருப்பணிகள், மண்டபங்கள், புணரமைப்புகள் அப்போதே மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பச்சையப்பர் பெயரில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் ஆறு கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 16 பள்ளிகள், 28 கோயில்களில் தர்மங்கள் நடக்கின்றன.

காலனித்துவ அரசின் அதிகாரம் அதற்குப் பின்னால் இருக்கும் சக்கர வியூகங்களில் வெறுக்கத்தக்க, பணக்கார வர்க்கமாக மெட்ராஸ் ‘துவிபாஷிகள்’ இனம் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் அதற்கு நேர்மாறாக பச்சையப்பர் உயர்வாகச் சித்தரிக்கப்படுவதுடன் 18 ஆம் நூற்றாண்டின் தன்னலமற்ற, சேவை மனப்பான்மை கொண்டவராக பச்சையப்பரை பழைய ஆவணங்கள் அடையாளப் படுத்துகின்றன.

இன்று நாம் காணும் பச்சையப்பரின் உருவப்படம் 1850 ஆம் ஆண்டு லண்டனில் ஆங்கில ஓவியர் ராம்சே ரிச்செட் ரிநாக் என்பவர் வரைந்த ஓவியத்தின் மறு உருவமே.

“சிவன் சொத்து குல நாசம்” என்பார்கள், முழு சிவ பக்தரான பச்சையப்பரின் சொத்துக்களை 227 வருடங்களாகப் பலரும், பல வகைகளில் தொடர்ந்து சூறையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீதிமன்ற வழக்குகளும், சட்டப் போர்களும் ஓய்ந்தபாடில்லை.