பருத்தி வணிகம் குறித்து வ.உ.சி பேச்சு

பருத்தி வணிகம் குறித்து பெரியவர் வ.உ.சி. பேச்சு
(கவனிக்க: விவசாய அமைப்புகள்)

தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சாதாரண பொதுமக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான சொற்பொழிவின் ஒரு பகுதி இது.

“நம் நாட்டுப் பருத்தியை அந்நியர்கள் ஏன் கொள்முதல் செய்ய வேண்டும் ? எதற்காக அவர்கள் அதிக இலாபத்திற்கு அதை ஏற்றுமதி செய்யவேண்டும்.? பருத்தி நம்முடையது. அதைப் பயிரிட்டு வேளாண்மை செய்பவர்கள் நம்மவர்கள். எனவே நம்முடைய பருத்தியை ஏன் நாமே கொள்முதல் செய்து , நாமே ஏற்றுமதி செய்யக்கூடாது? நம்முடைய உழைப்பின் மூலம் அந்நியர்கள் இலாபம் சம்பாதிக்க நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்.? சுதேசி கப்பல் நிறுவனத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அதனால் பிரிட்டீஷ் கப்பல் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்படத் தொடங்கி விட்டது. அடுத்தது பருத்தி நிறுவனம். அதையும் நாம் கைப்பற்ற வேண்டும்.

பருத்தி வணிகத்தை நடத்துவதற்கு தேவையான மூலதனத்தில் கால்பகுதியையும், உழைப்பாளர்களையும் வழங்க தூத்துக்குடி மக்கள் முன்வருவார்களானால், மீதமுள்ள முக்கால் பகுதி மூலதனத்தை முதலீடு செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மதுரையிலிருந்தும், சேலத்திலிருந்தும் பலர் எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். தூத்துக்குடி மக்களாகிய நீங்கள் எனக்கு உதவி புரிவீர்களானால் நான் இங்கு ஒரு பெரிய பஞ்சாலை நிறுவி நூலையும் எல்லா வகை துணிகளையும் தயாரிக்கத் தொடங்கி விடுவேன். உங்கள் ஒத்துழைப்பின் மூலமாக சுதேசிக் கப்பல் நிறுவனம் போல பஞ்சாலையையும் வெற்றிகரமாக உருவாக்கி விடலாம். என்று வ.உ.சி ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் அவரது பேச்சு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. விவசாய அமைப்புகளிடம் வ.உ.சி இது போன்ற பேசிய கருத்துகளை தொகுத்து வழங்கினால் வருங்கால விவசாய அன்பர்களுக்கு தெரிய வரும். இது போன்ற தலைவர்கள் இல்லாதது அல்லது அமையாதது காலத்தின் கோலம்தான். நூறு சதவீதம் மரபு சார் தற்சார்பு பொருளாதார வணிகத்தை அந்நியர்களுக்கு எதிராக செயற்படுத்தக்கூடியவராக இருந்தவர். இன்றைய கார்ப்பரேட் பொருளாதார அசுரர்களுக்கு இணையாக போராடவேண்டுமெனில் இன்னும் அதிகமாக வ.உ.சி.யிடம் கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது.

மூலம்: G.O.No. 1542, Judicial (Confidential) Department. Dated 3rd October 1911, pp.19-20. ( தமிழில் : திரு. சதாசிவன் எழுதிய சென்னை மாகாணத்தில் பொதுமக்கள் கருத்து வளர்ச்சி நூலில்)