Pulikuthi veera kodiyar

புலிக்குத்தி நடுகல் :

வைகையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள நிலக்கோட்டையை அடுத்த சித்தர்கள் நத்தம் என்னும் சிற்றூர்.

தென்னந்தோப்புகளினூடேயுள்ள வரப்புகளில் நடந்து சென்றால் முற்செடிகள் சூழ, எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரான சோழகுலாந்தகப் பெருவழியில் பெருங்கடுவாய் புலி ஒன்றைக் கொன்று தன் உயிரையும் விட்ட வீரனுக்காக எடுக்கப்பிக்கப்பட்ட புலிக்குத்தி நடுகல். நடுகல்லின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு பிற்பகுதி :

 

1.ஸ்வஸ்திஸ்ரீ கோமாற பன்மரா

2.ன திருபுவனச் சக்கரவத்திக

3.ள் எம்மண்டலமுங் கொண்

4.டருளியக் குலசேகர தேவற்கு

5.யாண்டு 20ஆவது சோழகு

6.லாந்தகனில் பெருவழியி

7.லே கிடந்து வழி நடப்பாற்

8.ஆள்(பட) பல நாளும் கடித்

9.த பெருங்(..கடு)வரிய்ப்புலியை

10.மாடக்குளக் கீழ் மதுரைச் சீவல்

11.லபப் பெரும் பள்ளிக்குப் பள்ளிச்

12.சந்தம் பாகனூர் கூற்றத்து பொ‌

13.ருந்திலான (தேவந்திர) வல்ல

14.புரத்து .. வீரகொடியாரில் நன

15…ன தேவப் பெருமான்ப் புலி

16.யை தனிக்கோட்டை கொ

17.ண்டு களத்திலே (பட)க் கொண்

18.டு தானுமுரிலே வந்து படு..

19.(க)யாலவனைக் கல்லிலே வெ

20.ட்டி நட்டு வித்தோ மிந்நகர(த்)

21.தோம்

 

கல்வெட்டு முற்பகுதி :

 

1.இவன் மகன் வலங்கை நாராய

2.ண தேவனுக்கு உதிரப்பட்டியாக..

3.நிலம் கருப்புருடையார்…

4.கு மேற்கு மண்டல சுவாமி ள..

5.க்கு கிழக்கு நடுவுபட்ட தென்கரையி

6.ல் ஒரு மாவரை இது இவனு..

7.க த….கும்..

செய்தி :

கல்வெட்டின் வாயிலாக பாண்டி நாட்டிலிருந்து மேற்கே சேரநாடு நோக்கிச் சென்ற பெருவழி சோழகுலாந்தகப் பெருவழி என அறிய முடிகிறது. சித்தர்கள் நத்தம் அன்றைய காலகட்டத்தில் பொருந்தலான தேவேந்திர வல்லபுரம் என்ற பெயரில் வணிக நகரமாக இருந்துள்ளது.

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது (பொது யுகம் 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்த மன்னன்) 20வது ஆட்சியாண்டில், இந்த சோழகுலாந்தகப் பெருவழியின் அருகில் உள்ள வனப்பகுதியில் பெருங்கடுவாய்ப்புலி ஒன்று இருந்து கொண்டு இந்த பெருவழி வழியாக பயணித்த பல வணிகர்களை கொன்றுள்ளது.

இதனையடுத்து வீரக்கொடியார் என்ற வணிகவீரர் குழுவினரில் தேவ பெருமான் என்ற ஒருவீரன், தனியொருவனாகச் சென்று அப்புலியைக் கொன்று, அவனும் உயிரை இழந்திருக்கிறான்.

சோழகுலாந்தகப் பெருவழியில் பயணம் செய்த பலரின் உயிரைப் பறித்த புலியைக் கொன்று, தன்னுயிரையும் இழந்த வீரனின் குடும்பத்தினருக்கு, பாகனூர் கூற்றத்து பொருந்தலான தேவேந்திரவல்லபுரம் வணிக நகரத்தார் ஒரு மாவரை நிலம் (உதிரப்பட்டியாக) தானமாக தந்துள்ளார்கள்.

சுமார் ஐந்தரையடி உயரமுள்ள இந்த கல்லில், அவ்வீரனின் நினைவாக புலியுடன் சண்டையிடுவது போல் நடுகல் அமைத்து, மேற்கண்ட செய்திகளை அடியிலும், பின்புறமும் கல்வெட்டாக அதில் பதிவு செய்துள்ளனர். கோரமான பற்களுடன் உள்ள புலியின் வால் வரிவரியாக அழகாகச் சிற்பத்தில் தெரிகிறது.

பொருந்தலான தேவேந்திரவல்லபுரம் என்னும் இப்பகுதி மதுரையில் இருந்த சிவல்லபப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளிக்குரிய நிலங்களைக் கொண்ட பள்ளிச்சந்தமாக இருந்துள்ளதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

தன் உயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை பறித்த புலியை வேட்டையாடி மாண்டு போன ஓர் மாவீரனின் நினைவாய் எடுப்பிக்கப்பட்ட வரலாற்று சின்னத்தை வாய்ப்புள்ளோர் சென்று பார்த்து வாருங்கள்.