கோவை நகரத்தையே தன் குழந்தையாய்த் தத்தெடுத்து வளர்த்த தந்தை இரத்தினசபாபதி முதலியார்

கோவை நகரத்தையே தன் குழந்தையாய்த் தத்தெடுத்து, அதற்கு ஊட்டி வளர்த்த தந்தை இரத்தினசபாபதி முதலியார். இரத்தினசபாபதி முதலியார் துளுவ வேளாள முதலியார் இனத்தில் கோவையில் பிறந்தார்.

சென்னை துளுவ வேளாளர் சங்கத்தின் நிறுவனரும், துணைத் தலைவரும் இந்த முதலியாரே.

கோவை நகரின் இதயமான ஆர்.எஸ்.புரத்துக்கு, ரத்தினசபாபதி புரம் என்று பெயர்வைத்தது, வெறும் கவுரவத்துக்காக இல்லை; காலம் காலமாக அவரது தியாகமும், சேவையும் சந்ததிகளைத் தாண்டி சரித்திரமாக பேசப்பட வேண்டுமென்று தான். அவரைப் பற்றி அறியாத இளைய தலைமுறைக்காக, இந்த அறிமுகம். சிறுவாணி நீராலும், சீதோஷ்ணநிலையாலும் அடையாளம் காணப்பட்டு, இன்றைக்கு, உயர் கல்வி, பல்துறை மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என பல உயரங்களைத் தொட்டுள்ள கோவை நகரம், ஒரு காலத்தில் ‘வாழத்தகுதியற்ற ஊர்’ ஆக ஆங்கிலேயரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குடிநீர் பஞ்சம், நிலத்தடி நீர் மாசுபட்டு மோசமாக இருந்திருக்கிறது. அப்போது, சிறுவாணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, கோவை மக்களின் தாகம் தீர்க்கும் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றியவர், அன்றைய கோவை நகராட்சி தலைவர் ரத்தின சபாபதி முதலியார். பழைய கோவை என்பது கிழக்கு மேற்காக இரண்டு மைல்; தெற்கு வடக்காக ஒரு மைல். மேற்கே சலீவன் வீதி, வடக்கே சுக்கிரவாரப்பேட்டை வீதி, கிழக்கே ரயில்வே ஸ்டேஷன், தெற்கே செட்டி வீதி எனப்படும் வைசியாள் வீதி. இதன்பின், முக்கிய பகுதிகளை ஒன்றிணைத்து, காடாய் இருந்த பகுதிகளை குடியிருப்பு நிலங்களாக மாற்றி, நகரை விரிவுபடுத்தினார். நகர வளர்ச்சிக்கேற்ப, மின்சார தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, பைக்காரா மின் திட்டத்தையும் கோவையுடன் இணைத்தவர். இத்தகைய பெருமைக்கு உரியவர் ரத்தின சபாபதி முதலியார்.

ரத்தினசபாபதி முதலியாரின் சமாதி, உக்கடம் அருகே நரசிம்ம பெருமாள் கோவில் பின்புறம் அமைந்திருக்கிறது. அதனருகே விநாயகர் கோவிலும், அரச மரமும் இருக்கிறது.