ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

 

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழுக்காட்டிற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 09.09.2022 அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில்/குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.