வ.உ.சி விடுதலை 1912

அன்புக்குரிய மனைவி மக்களின் பிரிவால் நேர்ந்த சிறைத் தனிமை பெரியவர் வ.உ.சி. அவர்களை வாட்டி வதைக்கிறது. தான் படும் துன்பத்தை பழங்காலத்தில் தூது விட்டு சொல்வது போல் பறவை இனங்கள் மூலம் நாகணவாய் புள்ளினம், மாடப்புறா, குயில் மற்றும் காகம் போன்ற புள்ளினங்கள் வழியாக இன்பம் தரும் சுற்றத்தைப் பிரிந்து தான் படும் அவஸ்தைகளை ஏக்கத்துடன் வருந்தி சோகம் ததும்பும் பாடல்களாக பதிவு செய்துள்ளார் வ.உ.சி. இப்பாடல்கள் நம்மையும் வருத்தி பெரியவர் மீது பரிவு கொள்ளச் செய்து விடுகிறது.

கூட்டினை விட்ட குரீஇ இக் குஞ்சேநீ
வீட்டினை விட்ட மிகையால் இக்- காட்டினில்
துன்பமுறு கின்றேன்போல் துன்பமுறுகின்றனையோ
இன்பமுறும் சுற்றம் இழந்து.

நானிலத்தில் இன்னொக்கல் நண்பருடன் உண்டுலவி
வானிலத்தார் போல் மகிழ்ந்து வாழ்ந்த தொத்து – நானிலத்துள்
நற்குறிஞ்சி வாழ்கின்ற நாகணவாய்ப் புள்ளினங்காள்
ஏற்குறைப்பீர் என்னோர் இயல்

வாழ்ந்து மகிழ்ந்துலவும் மாடப்புறா இனங்காள்
வாழ்ந்து மகிழ்ந்துலவி மன்பகையால்- தாழ்ந்து
சிறுமையுறும் என்னருமைச் சேய்மனையில் வூருள்
வறுமையுறு கின்றனரோ வந்து

கோங்குமர மீதிருந்து கூவும் குயில்இனங்காள்
தீங்குமர மீதிருந்து தீதுண்ணும் – ஆங்கு
சிறையுள்ளே பட்டுச் சிறுமையுறு கின்றேற்
சுறைவதென்னோ நீவீர் அடுத்து.

காகாவென் றின்று கரைந்துருகும் காகமே
ஆகாவென் தீயுள் அழிந்தின்று – போகாதோ
இன்பிற்கோர் எல்லை கண்டேன் இஞ்ஞான் றெனைவாட்டும்
துன்பிற்கோர் எல்லையின்றோ சொல்.

மூலம்; வ.உ.சி. பாடற்றிரட்டு