நாடும் பற்றும் – வ.உ.சி பேச்சு

 

மதுரைக்காரர் ஒருவர் இங்கிலாந்து போகிறார். அங்கே பல காலம் வாழ்கிறார். பின்னர் இந்தியா திரும்ப முடிவெடுக்கிறார். கப்பல் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்களிருக்கின்றன. இந்தியாவைக் காண வேண்டும் என நிமிடத்துக்கு நிமிடம் அவர் மனம் துடிக்கிறது. இரண்டு நாட்கள் கழித்துக் கப்பலில் ஏறுகிறார். பம்பாய்த் துறைமுகம் எப்போது கண்ணுக்குத் தெரியும் என அவர் கடலிருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

பம்பாய் வந்து சேருகிறார். சென்னைக்கு ரயில் ஏறுகிறார். இப்போது இந்தியாவைக் காண வேண்டும் என்கிற மனநிலை மாறி சென்னையைக் காண வேண்டும் எனும் மனநிலைக்கு வந்துவிடுகிறார். சென்னை வந்து சேருகிறார்.

இப்போது சென்னையைக் காண வேண்டும் என்கிற மனநிலை மாறி மதுரை மாவட்டத்தின் எல்லையைக் காண வேண்டும் எனும் மனநிலைக்கு வந்துவிடுகிறார். மதுரை மாவட்டத்தின் எல்லைக்கும் வந்துவிடுகிறார்.

இப்போது மதுரை மாவட்டத்தின் எல்லையைக் காண வேண்டும் என்கிற மனநிலை மாறி மதுரை நகரத்தைக் காண வேண்டும் எனும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்.

தூரப் பயணம் மேற்கொண்டு திரும்புகின்ற அனைவருக்குமே ஏற்படுகின்ற இந்த அனுபவம் எதைக் காட்டுகிறது?. இந்த நாட்டை, இந்த மண்ணை ஒவ்வொருவருமே நேசிக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது என்கிறார் பெரியவர். அதனால்தான் நாட்டுப் பற்று இல்லாத மனிதனே இருக்க முடியாது என்கிறார்.

ஒவ்வொருவருடைய மனதிலும் நாட்டுப் பற்று இருந்தபோதிலும் அதைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்திச் செயல்பட வைக்க வேண்டும் என்கிறார். அப்படிச் செயல்பட வைக்காவிட்டால் அந்த நாட்டுப்பற்றால் எந்த ஒரு பயனுமில்லை என்கிறார். சரி, எப்போதெல்லாம் அப்படிச் செயல்பட வைக்க வேண்டும்?.

மக்களுக்கு உணவு கிடைக்காதபோது, உடை கிடைக்காதபோது, நோய்கள் முதலிய துன்பங்கள் உண்டாகும்போது, தெய்வ சிந்தனை குறையும்போது, கல்வியறிவு குறையும்போது, செல்வச் சிறப்பு குறையும்போது, உரிமைகள் இழக்கும்போது, அடிமைத்தனத்திற்கு ஆளாகும்போது . . . . .இப்போதெல்லாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.

ஒருவன் பிறப்பதற்கு ஆதாரம் தாய் என்றால் அத்தாய்க்கும் அத்தாயினது முன்னோர்க்கும் ஆதாரமாக இருந்தது இந்த நாடல்லவா!. எனவே நாட்டுக்கு நேருகின்ற வறுமை, துன்பம், அடிமைத்தனம் ஆகியவற்றையெல்லாம் தனது தாய்க்கு வந்ததாகக் கருத வேண்டும் என்கிறார்.

தன்னைப் பெற்ற தாயானவள் உண்ண உணவில்லாமலும் உடுக்க உடையில்லாமலும் அன்னியனுக்கு அடிமையாயிருப்பதையும் பார்த்து மனம் சகிக்கக் கூடிய மகன்கள் உலகில் இருக்க முடியுமா?. எனவே இச்சமயங்களிலெல்லாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார். சரி எப்படிச் செயல்படுத்துவது?.

மக்களுக்கு உணவிடுதல், உடை கொடுத்தல், மருந்து கொடுத்தல் போன்ற உதவிகளைச் செய்து வறுமையை நீக்கி அவ்வறுமை மீண்டும் உருவாகாத வகையிலான செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.
கடவுள் ஞானம், கல்வியறிவு, பொருள் கொடுத்தல் போன்றவற்றை ஒவ்வொருவரும் அவரால் இயன்ற வகையில் செய்ய வேண்டும் என்கிறார். மேலும் பலரும் ஒன்றாகச் சேர்ந்து அன்னசாலை, ஆடை சாலை, வைத்திய சாலை, ஞானசபை, பள்ளிக்கூடம், கைத்தொழிற்சாலை போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்கிறார்.

ஆனால், மக்கள் சுதந்திரத்தை இழந்து அன்னியனுக்கு அடிமைப்பட நேர்ந்தால் அந்த அடிமைத்தனத்தைப் போக்கி சுதந்திரம் பெறுவதற்காக எல்லோரும் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்கிறார். அதுமட்டுமல்ல, வறுமையை விடவும் வியாதியை விடவும் சகிக்க முடியாதது அடிமைத்தனமே என்கிறார்.

மக்களுக்குச் செய்யும் அனைத்து வகையான உதவிகளிலும் அவர்களின் அடிமைத்தனத்தைப் போக்கும் உதவியே மேம்பட்டதும் முக்கியமானதும் அவசியமானதுமாகும் என்கிறார்.

அடிமைத்தனம் என்றால் என்ன?

ஒருவர் அடிமை எனும் பெயரோடு இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒருவர் தனக்கு நன்மையும் சுகமும் தரும் செயல்களைத் தானே விருப்பம்போல் செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதுதான் அடிமைத்தனம் என்கிறார்.

மக்கள் ஒன்றிணையத் தடையாயிருப்பது எது? ஜாதி மற்றும் மதத்தின்மீதான அபிமானங்கள்தான் என்கிறார். மக்களுக்குள் ஜாதி, மத அபிமானத்தால் உண்டான பிளவுகளைக் கொண்டிருக்கும் நாடுகளெல்லாம் உலகத்தில் தாழ்ந்திருக்கின்றன என்கிறார்.

ஜாதி என்பது செய்யும் தொழிலினால் உருவாக்கப்பட்டதாகவே பல நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஜாதிப் பெயரும் ஏதேனும் ஒரு தொழிலைக் குறிப்பிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அறியலாம் என்கிறார்.

மதம் என்பது அவ்வப்போது தோன்றிய பெரியவர்களுடைய அறிவு விளக்கம்தான். ஒருவருக்குத் தோன்றுகின்ற அறிவு விளக்கமானது மற்றவரது அறிவு விளக்கத்திற்குப் பொருந்திப் போகுமா? போகாது. வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இதை வைத்துக் கொண்டு மனிதர்கள் வேற்றுமை பாராட்டலாமா? எனக் கேட்கிறார்.

எனவே ஜாதி, மத விவகாரங்களைச் சொந்த விசயங்களாக மட்டுமே கருத வேண்டுமே தவிர பொது விசயங்களாகக் கருதக் கூடாது. எல்லோரும் ஒன்றுகூடி மக்களது அடிமைத்தனத்தை நீக்க உழைக்க வேண்டும் என்கிறார். நாட்டின் நன்மைக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உடல், பொருள், ஆவிகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார். சரி, இதனால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?.

நாடு நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருப்போம் என்கிறார். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நாட்டிற்கு வறுமை நேரும்போது அதைத் தன் தாய்க்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றை நீக்கக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.

* * * * * * * * * * *

1900ஆம் ஆண்டில் தனது முதல் கட்டுரையான `கடவுளும் பக்தியும்` எனும் கட்டுரையினை எழுதுகிறார். அதன்பின்னர் தொடர்ச்சியாக `விதி அல்லது ஊழ்` (1900), `ஈகை` (1900), `கடவுள் ஒருவரே` (1901) ஆகிய கட்டுரைகளை எழுதியவர் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, 1906ஆம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்து சுதேசியச் செயல்களைச் செய்யச் சொன்ன அவரது போதனையைக் கேட்டு விட்டு வந்து தனது முதல் அரசியற் கட்டுரையை எழுதுகிறார். “சுதேசபிமானம்“ எனும் அவரது முதற் அரசியற் கட்டுரையில்தான் மேற்சொன்னவற்றையெல்லாம் குறிப்பிடுகிறார்.

மாபெரும் அரசியற் சித்தாந்தங்கள் உருவாவதற்கான அடிப்படையாக இருந்தது, அதை உருவாக்கியவர்களுக்குத் தங்களது நாட்டின்மீது இருந்த பற்றுதானே தவிர வேறென்ன!.

நாட்டின்மீது மக்களுக்குப் பற்றில்லாத அல்லது மிகமிகக் குறைவான பற்றிருந்த காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை வெளியாகி இந்த பிப்ரவரி மாதத்துடன் 115 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது வாழ்ந்த மக்களுக்குத்தான் நாட்டுப்பற்று குறித்து விளக்குகிறார் பெரியவர். அது இப்போதும் பொருந்துமா?. நீங்களும் படித்துப் பாருங்கள்.