வ.உ.சி சிலைக்கு பூங்கா வளாகத்தில் இடம் ஒதுக்கியது மாநகராட்சி

 

கோவை:கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்துக்குள், முழு உருவச்சிலை நிறுவுவதற்கு, 50 அடி அகலம், 45 அடி நீளத்துக்கு, இடம் ஒதுக்கியுள்ளது மாநகராட்சி.தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, வ.உ.சி., 150வது பிறந்த நாளையொட்டி, கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்துக்குள் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்.இத்திட்டம் தொடர்பாக கருத்துரு அனுப்பி வைக்க, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேவையான இடம் ஒதுக்க, மாநகராட்சியிடம் பொதுப்பணித்துறை கோரியது.பூங்கா நுழைவாயில் தென்வடல் சாலைக்கு மேற்கே, 50 அடி அகலம், 45 அடி நீளம் இடம் ஒதுக்கி, பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கியிருக்கிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘முதல்கட்டமாக, வ.உ.சி.,க்கு சிலை அமைக்க, தேவையான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இனி, அரசாணை வெளியிட வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரித்து, டெண்டர் கோரி, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். அதன் பிறகே, சிலை வடிவமைத்து, அரசு ஒப்புதல் பெற்று, நிறுவப்படும்’ என்றனர்.