Somasundara Bharathi

தமிழுக்காக ஓய்வின்றி உழைத்த நாவலர் சோமசுந்தர பாரதி!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்தார் சோமசுந்தர பாரதியார். இவரின் இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டையபுரம் அரசின் பராமரிப்பில் வளர்ந்த இவர், தமிழ்ப் புலமை காரணமாக பாரதி என்ற பட்டம் பெற்றார்.

சென்னை சட்டக் கல்லுாரியில், இளநிலை சட்டம் பயின்றார். பிரபல வழக்கறிஞராக இருந்தபோதே, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று, சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வாழ்ந்தது மதுரை பசுமலையில்.

சுப்பிரமணிய சிவா, வ.உ.சி. ஆகியோர் மீதான வழக்குகளின்போது அவர்களுக்காக வாதாடினார். ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில் காந்தியின் வழியை பின்பற்றினார்.

‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி இவரைப் பெருமையாகக் கூறுவார்.

காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தவர். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தது மட்டுமில்லாமல், சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக குழந்தைகளின் நகைகளை கழற்றி காந்தியிடம் அளிக்க செய்தார்.

தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப் பள்ளியை நிறுவினார்.

சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்ட இவர், சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார்.

ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944 ஆண்டில் ‘நாவலர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.

திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் என தை இரண்டாம் தேதி என்றும் தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கமும், தமிழறிஞர்களும் முன்னெடுத்த முயற்சிகளாகும்.

தமிழுக்கு ஓயாமல் தொண்டு செய்த சோமசுந்தர பாரதியார் 1959, டிசம்பர் 14-ம் தேதி, தன் 80-வது வயதில் இயற்கை எய்தினார்.