சுதேசி வீரர் பிரிவு

சுதேசி வீரர் பிரிவு

30 வருடங்களுக்கு முன்பு நம் நாடு இருந்த நிலைமை நம்மில் பலருக்கு நினைவு இருக்காது. அந்தக் காலத்திலே ஜனங்களுக்கு இருந்த கிலியையும் அதிகாரிகளுக்கு இருந்த வலியையும் இரண்டொரு உதாரணத்தால் விளக்கலாம் “வந்தே மாதரம்” என்றால் ராஜ துரோகம். தேசபக்தி, சுயராஜ்யம் இவை ரகசிய கனவுகள். சுதேசி வியாபாரம் மிக மிகத் துணிச்சலான சாகசம். ஆனால் அந்த நாளிலும் தேசபக்தி வெறி பிடித்தவர்கள் இருந்தனர் வங்காளத்தில் விபின் சந்திர பாலர், பம்பாயில் திலகர், பாஞ்சாலத்தில் லஜபதிராய், சென்னைக்கு ஜி.சுப்பிரமணி ஐயர், தெற்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை. ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் ஒரு வக்கீல் அந்த காலத்து வக்கீலைப் போல நல்ல சம்பாத்தியம். சுதேசி வெறி தூண்டியதால் இவரும் மற்றவர்களும் சேர்ந்து சுதேசிக் கப்பல் கம்பெனி ஆரம்பித்தார்கள். வெள்ளையர்களுக்கு இது பிடிக்குமா? இந்நாடு வெள்ளைக்காரர்கள் உடையதாக இருக்கையில் இப்பேர்ப்பட்ட சதி நடக்க விடுவார்களா?

சிதம்பரம் பிள்ளை மீது ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு ஜென்மம் சிறைவாசம் 20 வருஷம் தீவாந்திர சிறை விதிக்கப்பட்டது. அப்பீலில் 6 வருஷ மாக மாறியது. சிறையில் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை அவருடைய சகாவான (“ஞானபானு” பத்திரிக்கை ஆசிரியர்) ஸ்ரீமான் சுப்பிரமணிய சிவாவும் பட்ட கஷ்டங்களும் அவஸ்தைகளும் இந்தநாளில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

பிள்ளையவர்கள் சிறைவாசத்துக்கு பின்னும் மனம் தளராது இருந்து வந்தார். ஆயினும் பின் தோன்றிய சுயராஜ்யக் கிளர்ச்சிகளில் அவர் அதிகமாய் கலந்து கொள்ளவில்லை. பழைய தேசபக்தர் ஆகவே விளங்கி வந்தார். தமிழ்த் தொண்டில் அதிகமாய் ஈடுபட்டார் அந்த நாளில் அவருடைய வீரம் வியக்கத்தக்கதாக இருந்தது. தமிழ்நாட்டு கவியான பாரதியார் அவருக்கும் அவரை தண்டித்த கலெக்டருக்கும் நடந்த சம்வாதமாக,

“நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் கனல் முட்டினாய்”

என்று ஆரம்பிக்கும் பாட்டையும்

“சொந்த நாட்டில் பார்க்கடிமை செய்தே
துஞ்சிவடோம் இனி அஞ்சிடோம்”

என்ற வீர கனத்தையும் இயற்றினார் என்றால் அதைவிட ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் தேசபக்திக்கு வேற என்ன புகழ் வேண்டும்?

இத்தகைய பெரியார் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
அவருடைய குடும்பத்தாருக்கு சுதேசி செய்திகள் தன் மனமார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.