Free fire

Free fire எனும் போதை

Free fire – ஒரு செல்போன் விளையாட்டு,
2017இல் அறிமுகமான இது, தொடக்கத்தில் மற்ற விளையாட்டுகளைப் போல பொழுதுபோக்கிற்கான ஒன்றாகத்தான் இருந்தது.

துவக்கத்தில், அந்த விளையாட்டை உருவாக்கிய கரீனா நிறுவனம், விளையாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. upadate க்கு பின் update ஆக விளையாட்டை மெருகேற்றிக் கொண்டே வந்தது. இவ்விளையாட்டு புழக்கத்திற்கு வந்து தற்போது 3 வருடங்கள் ஆகிவிட்டன.

பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு ஓரளவு அதிக வசதிகள் கொண்ட விலையுயர்ந்த செல்போன்கள் தேவைப்படும். ஆனால், 3GB RAM கொண்ட நடுத்தர ரக செல்போன்களே free fire விளையாட போதும். இது, இவ்விளையாட்டை உலகின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச்சென்றது.

இதன் தாக்கம் இந்தியாவில் ரொம்பவும் அதிகம். அதிலும் குறிப்பாக குழந்தைகளும் சிறுவர்களுமே இதற்கு இலக்காகிறார்கள்.

இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில் gaming pc, laptop என்பவை எல்லாம் எல்லோராலும் வாங்க இயலாது. ஆனால் ஆண்டராய்டு செல்போன்கள் பெரும்பாலும் அனைத்து நடுத்தர குடும்பங்களையும் சென்றடைந்து விட்டன.

இதுவே கரீனா நிறுவனத்திற்கான சரியான தளமாக/வாய்ப்பாக இந்தியாவை உருவாக்கியது. இந்த மூன்று வருட காலத்தில் நிறைய குழந்தைகளையும், சிறுவர்களையும் கரீனா ஈர்த்துக் கொண்டது.

• ஒவ்வொரு புதிய update-இலும் புதிய உடைகள் மற்றும் ஆயுதங்கள் (costumes and Gun’s) அறிமுகப்படுத்தப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அந்த வசதிகளை சாதாரணமாக பயன்படுத்தி விட முடியாது.

விளையாட்டில் குறிப்பிட்ட diamondகளை கொடுத்து அந்த வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இதில், விளையாடுவதன் மூலம் free diamondகள் சரிவரக் கிடைக்காமல் நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்பதும் மேலும் diamondகளை நாம் பணம் கட்டி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

• இவ்வாறாக புதிய வசதிகளுக்காக ரூபாய் நோட்டுகளை செலவிடுவது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மனதளவிலான பாதிப்பையும் இது அதிகம் உண்டு பண்ணும்.

இப்போது இதில் விளையாடுபவர்கள் ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தை இதிலேயே செலவிடுகிறார்கள். அவர்கள் சிந்தனையின் வட்டம் குறுகி அந்த விளையாட்டே முழுவதுமாய் ஆக்கிரமிக்கிறது.

சிலர் ஏதோ ஒரு விதத்தில் அந்த மாயை / போதையில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். அவ்வாறு மீண்டு வந்தவர்கள் திரும்பிப் பார்க்கையில் தனது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை இந்த விளையாட்டு அபகரித்து விட்டதையும் அந்தக் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் கைநழுவிப் போயிருப்பதையும் உணர்கிறார்கள்.

ஒரு கல்லூரி இறுதி ஆண்டு மாணவனின் அடுத்த கட்ட நகர்விலும் வெளி உலகை தெரிய எத்தனிக்கும் குழந்தைகளின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய தடையை உருவாக்கி தடத்தை மட்டும் விட்டு செல்கிறது இந்த விளையாட்டு.

தற்போது இவ்விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. இதை உற்றுநோக்கும் கால், ஆரம்ப காலத்தில் விளையாட்டிற்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தைக் குறைத்து, முழுக்கவே பணத்தை நோக்கமாகக் கொண்டு கரீனா நிறுவனம் நகர்ந்து வருவதை நம்மால் அவதானிக்க முடியும்.

இக்கட்டுரையாளர் தனது சொந்த அனுபவத்தில் கண்டது : கொத்தனார் வேலை பார்த்துவரும் ஒருவரின் மகன் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறான். அவனுடைய purchase history, அதாவது அந்த விளையாட்டில் பணம் செலுத்தி வாங்கிய வசதிகளை எடுத்து பார்க்கும் போது தெரிந்தது, கடந்த இரண்டு வருடங்களில் மட்டுமே 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக அந்த விளையாட்டிற்காக அவன் செலவு செய்திருக்கிறான்.

இதில் இன்னும் ஆபத்தான விவகாரம் என்னவென்றால், நிறைய வசதிகளுடன் அந்த விளையாட்டை விளையாட வேண்டி, நிறைய நாட்கள் விளையாடி நிறைய வசதிகளை பெற்று வைத்திருப்பவர்களின் (அந்த விளையாட்டோடு இணைக்கப்பட்டிருக்கும்) Facebook ID ஐ மற்றவர்களுடன் exchange செய்து மாற்றும் வழக்கமும் வளர்ந்து வருகிறது. இது நிறைய திருட்டுகளுக்கும் வழிவகுக்கிறது.

சாதாரணமாக ஒருவர் இந்த விளையாட்டை துவங்க அவரது முகநூல் கணக்கு அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை இணைத்ததும் ரூபாய் 10க்கு (ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி) சில Diamondகள் அல்லது Costumeகள் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு வாங்கிவிட்டால் பின்னர் 90 ரூபாய்க்கான விளம்பரம்/அறிவுறுத்தல் வரும். அதையும் ஒருவர் பணம் செலுத்தி வாங்கினால், அதன் மதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும்.

இந்தியாவின் அடுத்த தலைமுறையில் 100 க்கு 90 பேர் நிச்சயம் இந்த விளையாட்டை விளையாடியவராக/விளையாடிக்கொண்டு இருப்பவர்களாக இருப்பார்கள். அதிலும் குறைந்தது 75 சதவிகிதம் இந்த விளையாட்டிற்கு அடிமையாகிப் போயிருப்பார்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கும் நாம் நிச்சயம் நம்மை சுற்றி ஒருவரையாவது இந்த வகையில் பார்த்திருப்போம்.

இந்த விளையாட்டின் மறைமுக பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மாணவர் வாழ்வின் முக்கியமான நேரங்களும் எளிய மக்களின் பணமும் சிறுவர்களின் மனதும் நேரடியாக பாதிப்படைவதை நம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இன்னும் நிறைய ஆன்லைன் விளையாட்டுகளும் இது போலவே தான் செயல்படுகின்றன. Game addiction என்பது எப்போதுமே ஆபத்தான ஒன்று.

MPL, Rummy என பெரியவர்கள்/இளைஞர்களை இலக்காக கொண்ட ஆன்லைன் விளையாட்டுக்களால் பல குடும்பங்கள் எதிர்காலம் இழந்து நிர்கதியான நிலையில் (சமயங்களில் தற்கொலை வரை), அவற்றை தொடர்ந்து வரும் இந்த Free Fire சிறுவர்களை தனது இலக்காக வைத்து களமாடிக் கொண்டிருக்கிறது.

காலத்தை பொறுத்து அந்த விளையாட்டை விட்டு வெளியே வருகிறவர்கள் வந்துவிடுவார்கள்….

ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை மொத்தமாக உடனே நிறுத்துவதும் அவர்களை மனதை பாதித்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வேறு விஷயங்களில் அவர்களின் கவனத்தை செலுத்தச் செய்து, அவர்களுக்கு அதற்கான நேரம் கொடுத்து அவர்களை அதில் இருந்து மீட்பது சரியாக அமையும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே…