Rain

தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கிழக்கு திசையில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசையில் காற்றழுத்தம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால், கேரளா, மாஹே மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரவலாக இடியுடன் மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் இன்றும், லட்சத்தீவு பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கிழக்கு திசை காற்றழுத்தம் காரணமாக, தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பான மற்றும் இயல்புக்கு அதிகமான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது