ஜெய்பீம்:ஜாதி மோதலால் முதல்வராக நினைக்கும் அன்புமணியின் கனவு பலிக்காது- கொங்கு மக்கள் முன்னணி பொளேர்

சென்னை: ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கொங்கு மக்கள் முன்னணி களமிறங்கியுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பிய பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணிக்கு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் போது திரைக்கதை வடிவமைப்பில் சில கற்பனை காட்சிகள் படமாக்கப்படுவது வாடிக்கையே! அப்படி காட்சிப்படுத்தப்பட்ட “ஜெய்பீம்” திரைப்படத்தில் சில விநாடிகள் வரும் காட்சியில் உள்ள கலச குண்டம் உள்ள புகைப்படத்தால் வன்னியர்கள் அவமதிக்கப்பட்டனர் என பாமகவினரால் சர்ச்சை எழுப்பப்பட்டது!

இந்த எதிர்ப்பை தொடர்ந்து கலசகுண்டம் காட்சியும் மாற்றப்பட்டு விட்டது! அதை தொடர்ந்து குருமூர்த்தி என்ற பெயர் எங்க வன்னியர் சமூகத்தின் நபரை குறிக்கிறது என்றும் எதிர்ப்பு குரல் அன்புமணியால் எழுப்பப்படுகிறது! திரைபடத்தில் வரும் காட்சிகளை அமைப்பது இயக்குனரே ஆவார். இயக்குனரை அன்புமணி கேள்வி கேட்காமல், நடிகரான சூர்யாவை மட்டும் குறிவைத்து மக்களை தூண்டிவிடுவது விளம்பர சுயலாப உள்நோக்கம் கொண்ட அரசியலே!

உண்மை கதையில் பல மாற்றங்கள்

திரைப்பட கதையில் பாதிக்கப்பட்ட சமூகமாக இருளர் சமூகத்தை காட்டுக்கின்றனர் உண்மையாக நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குறவர் சமூகம் ஆகும். மேலும் சில கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் ஊர் பெயர்கள் உண்மை நிகழ்வோடு பொருத்தமாகவும், சில பெயர்கள் கற்பனையாகவும் திரைப்படத்தில் காட்டப்படுகிறது. ஆனால், ஒற்றை கலசகுண்டம் காட்சியை கொண்டே (அது மாற்றப்பட்ட பின்னும்) எங்களை அவமதித்து விட்டனர் என வன்மத்தை வன்னியர்களிடம் தூண்டிவிடும் அன்புமணிக்கு சில கேள்விகள்.

வேளாளர் பெயரை தாரை வார்த்த ராமதாஸ்

தமிழர் நிலத்தின் பன்னெடுங்கால வரலாறு கொண்ட வேளாளர் சாதிய பெயரை பள்ளர் சமூகத்திற்கு தாரை வார்க்கும் நிகழ்வு அரங்கேறிய போது வேளாளர் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நின்று எதிர்த்து வந்தனர். ஆனால் ராமதாசோ வேளாளர் உணர்வை புரிந்து கொள்ளாமல் 1994ம் ஆண்டு பரமக்குடியில் வேளாளர் பெயரை பள்ளர் சமூகத்திற்கு தாரை வார்க்க வேண்டும் என பாமக அரசியல் மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் தீர்மானம் நிறைவேற்றினார்.

கள்ள மவுனமும் முதல்வர் தகுதியும்

மேலும, 2012ம் ஆண்டு இதே கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி கோடிக்கணக்கான வேளாளர் சமூகத்தினரின் உள்ளங்களை காயப்படுத்தினார். அதன் பின்னும் அறிக்கை மேல் அறிக்கையாக வெளியிட்டு பள்ளர் தான் வேளாளர் என கூப்பாடும் போட்டார். அப்போது வேளாளர் சமூகத்தின் குரல் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் கேட்கவில்லையா? ஒரு திரைப்படத்திற்கே இப்படி கொந்தளிக்கும் அன்புமணி வேளாளர் பெயர் நிகழ்வில் தன் கட்சியும், தந்தையும் நடந்து கொண்டதை கண்டிக்காமல் கள்ள மவுனம் காத்து விட்டு இன்று நல்லவர் போல வேடமிடுவது சரியா? இதுவா முதல்வர் ஆவதற்கான தகுதி?

பலிக்காது முதல்வர் கனவு

சாதி, மத மோதலை பாமக ஆதரிக்காது என சூர்யாவுக்கு கேள்வி எழுப்பும் அன்புமணிக்கு இந்த செயல் ஒற்றுமையையா காட்டுகிறது? தொடர்ந்து தமிழ் சமூகத்தில் சாதிய மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்டும், உண்மைக்கு மாறாகவும் செயல்பட்டு, பிற சமூகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டும், தான் மட்டும் முதல்வர் ஆக வேண்டும் என தனது அரசியலை அன்புமணி கையிலெடுக்க ஆசைப்படுகிறார். இது ஒரு போதும் பலனளிக்காது.

பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சூர்யா

மாபெரும் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ராமதாஸின் பாமக.. இன்று அற்ப திரைப்பட காட்சிகளுக்காகவும், திரைத்துறை நடிகர்களுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தும் கட்சியாக சுருங்கி போனதே அன்புமணியின் குறுகிய செயல்பாட்டால் தான்! உங்களால் வன்னியர் சமூகம் பின்னோக்கி தான் செல்கிறதே தவிர முன்னோக்கி அல்ல! பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த சூர்யாவை ஒரு திரைப்படத்தில் திரைக்கதையில் வைத்த ஒரு பெயருக்காகவும், காட்டப்பட்ட கலச குண்டம் காட்சிக்காகவும் சாதிய பற்றோடு மிரட்டும் அன்புமணி ராமதாஸ், வேறு சமூகத்திற்கு எங்கள் வேளாளர் சமூக பெயரை தாரை வார்க்கும் போது ஆதரித்தது தவறு என தெரியலையா? வேளாளர் சமூகத்தினருக்கு செய்த துரோகம் என உணரவில்லையா? இவ்வாறு கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.