Rajaraja chozhar

 

அருண்மொழிவர்மன் முதல் சிவபாதசேகரன் வரை.

சோழ சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது சோழர் குலத்தில் தோன்றிய அரசர்களின் ஆற்றலே.அத்தகைய ஆற்றல் மிகுந்த சோழ மன்னர்களுள் தலைசிறந்தவர் இராஜராஜர் என்றால் மிகையாகாது.புகழ்மிக்க இராஜராஜரின் பிறந்த தினம் ஐப்பசி சதயம்.இந்த ஆண்டு நாளை இராஜராஜரின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

இராஜராஜர் என்று வரலாற்றில் இடம்பெற்ற மாமன்னரின் இயற்பெயர் அருண்மொழிவர்மன்.திருவலங்காடு செப்பு பட்டயத்தில் இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆட்சிக்கு வந்த பின்னர் இவருக்கு ஏகப்பட்ட சிறப்பு பெயர்கள்.இவரது பல சிறப்பு பெயர்கள் வளநாட்டு பிரிவுக்கும்(தற்போதைய தாலுகா மாதிரி,இராஜராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்த வளநாட்டு பிரிவு),மண்டலங்களும் சூட்டப்பட்டது.இவரது சிறப்பு பெயர்களையும்,அதற்கான விளக்கங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இராஜராஜன்:

இராஜராஜன் என்ற பெயர் இவரது மூன்றாம் ஆண்டு கல்வெட்டிலே நமக்கு கிடைக்க பெறுகிறது.அரசர்க்கு எல்லாம் அரசன் என்பது இதன் பொருளாகும்.

கேரளாந்தகன்:

இராஜராஜரின் மிகப்பெரிய போர் வெற்றியான ,காந்தளூர் சாலை வெற்றிக்கு பின் இந்த விருது பெயர் கிடைத்தது.கேரள அரசனுக்கு எமன் போன்றவன் என்பது இந்த பெயரின் பொருள். தனது முதல் போரின் வெற்றியின் நினைவாக ,தஞ்சை பெரிய கோவிலின் முதல் கோபுரத்திற்கு கேரளாந்தகன் வாயில் என்று பெயர் சூட்டப்பட்டது

இராஜாசிரியன்:

மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை போரில் வென்றதால்,இராஜராஜருக்கு இராஜாசிரியன் என்ற சிறப்பு பெயர் உண்டு.இந்த இராஜாசிரியன் என்ற பெயரில் தஞ்சாவூர் அரண்மனையில் ஒரு பந்தல் இருந்ததாக தஞ்சாவூர் கோவில் கல்வெட்டு கூறுகிறது.

ஜனநாதன்:

மக்கள் தலைவன் என்று பொருள்ள ஜனநாதன் என்ற பெயரும் இராஜராஜருக்கு உண்டு.இராஜராஜர் காலத்தில் ஈழநாடு கைப்பற்றப்பட்டு,ஈழநாட்டில் உள்ள பொலன்னருவா என்ற ஊர்,ஜனநாதமங்கலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு,ஈழத்தில் சோழர்களின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

ஜெயங்கொண்ட சோழன்

எங்கும் தோல்வியே காணாத வெற்றிவீரன் என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில் ஜெயங்கொண்ட சோழன் என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

பாண்டியகுலாசனி:

பாண்டியர்களை வீழ்த்தி பாண்டிய மண்டலத்தை வெற்றி கொண்டதால் ,பாண்டியர்களின் குலத்திற்கு இடியினைப் போன்றவன் என்ற பொருள் வரும் இந்த பெயர் அவருக்கு வழங்கப்படுகிறது. பாண்டியகுலாசனி வளநாட்டில் தான்
அன்று தஞ்சாவூர் அமைந்து இருந்தது என்பதை தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

மும்முடிச்சோழன்:

பாண்டியர்களையும்,சேரர்களையும் இராஜராஜர் தோற்கடித்த செய்தி,தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது.தமிழகத்து மூவேந்தர் முடி மூன்றையும் தானே சூட்டிக் கொண்டதால் மும்முடிச் சோழன் என அழைக்கப்பட்டார்.

இரணமுகவீமன்:

போர்க்களத்தில் வீமனைப் போன்று வெல்வதற்குரிய ஆற்றலை பெற்று இருந்ததால் இரணமுக வீமன் என்ற சிறப்பு பெயரை பெற்றார்

சத்ருபுஜங்கன்

பகைவர்களை வென்ற தோள்கள் உடையவன் என்ற பொருளில் சத்ருபுஜங்கன் என்ற பெயர் உண்டு.

சண்டபராக்கிரமன்:

எமனைப் போல வலிந்து கவருவதில் பேராற்றலும்,பெருஞ்சீற்றமும் உடையவன் என்ற பொருளில் சண்டபராக்கிரமன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

இராசவித்தியாதரன்:

இசைக் கலையில் சிறந்தவன் என்ற பொருளில் இராசவித்தியாதரன் என்ற பட்டம் அவருக்கு உள்ளது.

ஷத்திரியசிகாமணி:

அரச மரபிற்கு மணிமுடி போன்றவன் என்று பொருள்

இராசமார்த்தாண்டன்:

அரசர்களில் கதிரவனைப் போன்றவன் என்று பொருள்.

அரிதுர்க்கலங்கன்:

பகைவர்களின் அரண்களை அழிப்பதில் வல்லவன் என்று பொருள்

மூர்த்த விக்கிரமாபரணன்

வெற்றியையே ஆபரணமாக அணிந்த திருக்கோலத்தான் என்று பொருள்.

பண்டிதசோழன்:

அவருடைய கல்விநலன் கருதியும்,கலையணர்வு கருதியும் வழங்கப்பட்ட பெயர்

உத்தமசோழன்:

அவன் நல்லவன்,குறைகளற்றவன்,சான்றோன் என்பதை குறிக்கும் பெயர்கள்

அபயகுலசேகரன்:

தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் பண்பாளன் என்பதை அபயகுலசேகரன் என்ற பட்டம் அறிவிக்கிறது.

இராஜ சர்வஞ்ஞன்;

அரசர்களுள் முற்றும் அறிந்த மூதறிவாளன் என்று பொருள்

பெரிய பெருமாள்:

பெருமைக்குரிய,மிகப்பெரும் வேந்தனாக திகழ்ந்ததால்,பெரிய பெருமாள் என்ற பெயர் அவருக்கு உண்டு.தஞ்சாவூர் கோவிலில் இராஜராஜருக்கு எடுக்கப்பட்ட சிலை பற்றி கூறும் கல்வெட்டில் இராஜராஜர்,பெரிய பெருமாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிங்களாந்தகன்:

ஈழ நாட்டை வெற்றி கொண்டு,சிங்கள அரசர்க்கு எமன் போன்றவன் என்ற பொருளில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர்

சோழர் குலம் சூரிய வழிவந்தது,அந்த அரச மரபின் மாணிக்கமாகவும்,மணிமுடியாகவும் இராஜராஜர் திகழந்தார் என்பதனை இரவிகுல மாணிக்கம்,இரவிவம்ச சிகாமணி என்ற சிறப்பு பெயர்கள் தெரிவிக்கிறது.

சோழேந்திர சிம்மன்,நிகரிலிசோழன் என்ற பெயர்கள் சோழர் குலத்தில் தோன்றிய இந்திரன் என்றும்,ஒப்பாருமிக்காருமில்லாச் சோழப் பேரரசன் என்று கூறுகின்றன.

அழகிய சோழன்,சோழகுல சுந்தரன் என்ற விருதுப்பெயர்கள் இராஜராஜரின் தோற்றப் பொழிவை சூட்டுவதாகும்

இராஜவிநோதன்,நித்த விநோதன் ஆகிய பெயர்கள் இராஜராஜருக்கு கலைகளில் இருந்த ஈடுபாட்டை உணர்த்துகின்றன.

சிவபாதசேகரன்

இராஜராஜரின் கனிந்த சிவபக்தியை உணர்த்தும் பெயர்.

மேலே சொல்லப்பட்ட சிறப்பு பெயர்கள் எல்லாம் இராஜராஜரின் ஒவ்வொரு வகையான பெருமைகளை கூறுகின்றன.இது எல்லாம் புகழ்ச்சி இல்லை,உண்மை என்பதற்கு அவர் காலத்து கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் சாட்சியாக இன்றும் உள்ளது.

சூரிய சந்திரர் உள்ளவரை,மாமன்னர் இராஜராஜரின் பெயரும்,புகழும் இந்த புவியில் நிலைத்திருக்கும்.