Kalingarayar

காலிங்கராயகவுண்டர்

கொங்கு வரலாற்றில் ஒப்பில்லாதவர் காலிங்கராயகவுண்டர் .இவர் கி . பி 13ம் நூற்றாண்டிலேயே முப்போகம் விளையும் வண்ணம் அணைகட்டி , கால்வாய் வெட்டி அவற்றை நாட்டுடமையாக்கினார் .

வெள்ளோடு கனகபுரத்தில் கொங்கு வேளாளர் இனத்தில் சாத்தாந்தை  குலத்தில்  நஞ்சையகவுண்டருக்கு மகனாக பிறந்தார் . இவர் வீரபாண்டியன் (கி.பி.1265 – 1280)  ஆட்சியில் தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தார் . கொங்கு நாட்டை நிர்வகிக்கும் உரிமையை பெற்ற இவர் , வெள்ளோட்டை தலைமையிடமாக கொண்டு அதை சுற்றியுள்ள பகுதிகளை நிர்வாகம் செய்தார். வெள்ளோட்டைச் சுற்றி கிழக்கே காவிரி, தெற்கே நொய்யல் மற்றும் வடக்கே பவானி என நதிகள் ஓடினாலும்  வெள்ளோடு ஒரு மேட்டுநில வறண்ட பூமியாகவே இருந்தது. தனது நாட்டினை வளப்படுத்த எண்ணிய காளிங்கராயகவுண்டர் வடக்கே பவானியிலிருந்து ஒரு கால்வாய் மூலம் தம் நாடு நெடுகிலும் நீர்பாய்ச்சி இறுதியில் காவிரியில் கலக்குமாறு ஒரு கால்வாய் வெட்ட எண்ணினார். பவானி ஆற்றில் அணை கட்டி பூந்துறை நாட்டில் சாமை விளையும் காடெல்லாம் சம்பா விளையும் பூமியாக மாற்ற எண்ணினார் .

பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

முதலில் பவானி ஆற்றில் ஒரு அணைகட்டி நீரினைத் தேக்கி பிறகு அந்நீரினை கால்வாய் மூலம் தன் நாடு வழியாக செல்லுமாறு திட்டம் வகுத்தார்.இதற்கென
வீரபண்டியன் உதவி , நாட்டில் விதித்த கலிங்கராயர் விநியோகம் என்ற வரி , குடும்ப பணம் ஆகியவற்றால் ஊராட்சி கோட்டை மலையையும் , கல் கொண்டு வரும் வழியையும் விலைக்கு வாங்கி ,12 ஆண்டுகளில் கால்வாய் மற்றும் அணைக்கட்டும் கட்டி முடித்தார்.

கால்வாய் நீர் உடனடியாக விரைந்து செல்லாத வண்ணம் பாம்புபோல வளைந்து செல்லுமாறு கட்டியதால் தண்ணீர் நின்று மெதுவாக சென்றது. இதனால் நிலத்தடி நீரும் பராமரிக்கப்பட்டது. நாடும் வளம் பெற்றது.

சில ஆண்டுகளில்  காலிங்கராயர் தன் சொந்த நிலங்களை வளமாக்கத்தான் கால்வாய் வெட்டினார் என்ற சொல்லும் உண்டானது.

தாங்கள் செய்த அறச்செயலை தானோ தன் சந்ததியினரோ பயன்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணி அணையையும் கால்வாயையும் நாட்டுடமை ஆக்கி விட்டு,

“இனி நானோ என் வழிவந்தவர்களோ இந்த கால்வாயின் தண்ணீரை பயன்படுத்தமாட்டோம்”
என்று சத்தியம் செய்துவிட்டு தான் வாழ்ந்த வெள்ளோட்டை விட்டு காவடிக்கா நாட்டில் தன் மாட்டுப் பட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றுக் குழிகள் (ஊத்துக்குளி) இருந்த இடத்தில் புது ஊர் ஏற்படுத்தி அங்கு சென்று வாழ்த்தார் . அந்த இடம் தற்போதைய பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி ஆகும்.

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை என்றாலே சிறு குழந்தையும் கை காட்டும் இடமாக உள்ளது . தான் கட்டிய வாய்க்கால் நீரைத் தன்னுடைய சந்ததியினர் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று அன்று கொடுத்த வாக்குறுதியை காலிங்கராயரின் வாரிசுகள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இப்போதைய ஜமீன் ஊத்துக்குளியில் காலிங்கராயன் பரம்பரையினர் 10 ஊர்களுக்கு அதாவது ஊத்துக்குளி, முத்தூர், போடிபாளையம், குளத்தூர், சேர்வைக் காரன்பாளையம், ராசிசெட்டிபாளையம், ஐயம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், திம்மங்குத்து ஆகிய ஊர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர் .

காலிங்கராயர் மற்றும் சமத்தூர் ஜமீன்களுக்கு இடையில் பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
இப்போது ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையில் அகத்தூர் அருண்குமார் காலிங்கராயர் வசித்து வருகிறார். அருண்குமார் காலிங்கராயரின் கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனையில் ஒரு பகுதி மட்டும் இப்போதும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.

அரண்மனைக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது பாடம் செய்யப்பட்ட சிறுத்தையும், கரடியும் தான் . ஊத்துக்குளி ஜமீன் முத்திரை  இரு தந்தங்களுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது.
பழங்காலக் கத்திகள், பாடம் செய்து வைக்கப்பட்ட யானையின் துதிக்கை, பல்வேறு வகையான மான் கொம்புகள்,  ஜமீன்தாரரின் மாட்டு வாகனங்கள், ஆங்கிலேயர் வழங்கிய சிம்மாசன இருக்கைகள் ஆகியவை இன்றும்  பாதுகாக்கப்படுகின்றன.

நீர்மேலாண்மைக்கு இன்றளவிலும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது காலிங்கராயன் கால்வாய் என்றால் அது மிகையல்ல.