தானாபதி சிவ சுப்பிரமணியம்பிள்ளை வீடு

வ.உ.சி வீட்டின் பக்கத்து வீடு!

 

ஒட்டப்பிடாரத்தில், வ.உ.சி. வீட்டின் அருகில் ஒரு வீடு தள்ளி இரண்டாவதாக ஒரு இராஜா காலத்துக் கோட்டைபோன்று இருந்த ஒரு பழைய வீட்டைப்பார்த்து அதன் உள்ளே சென்றோம். வீடு அங்கங்கே சிதிலமடைந்து, நீரற்று வறண்ட நிலையில் பாழடைந்த ஒரு வட்டக்கிணறுடன் இருந்தது. உள்ளே நடைப்பகுதியிலேயே பைக் , சைக்கிள் போன்றவை நிறுத்தப்பட்டிருந்தன. அதனையடுத்து, மாடு, கன்று கட்டப்பட்டு, அவை வைக்கோலையும் புற்களையும் மேய்ந்துகொண்டிருந்தன. உட்பகுதியில் பழைய பின்பக்கப் புழக்கடைவீடு, பழைய காலத்து மாடிப்படிகள் போன்றவை இருந்தன. அங்கிருந்த ஒரு வயதான அம்மாவிடம், “இது யாருடைய வீடு?” எனக்கேட்டோம்.

 

அது இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் அரசவையில் போர்ப்படைத் தளபதியாக இருந்த தானாதிபதி சுப்பிரமணிய பிள்ளையின் வீடு என அறிந்து ஒருகணம் நம்உடல் சிலிர்த்தது.

எதேச்சையாக நாம் நுழைந்து விசாரித்த இந்தவீடு எவ்வளவு பெரிய பழம்வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்றெண்ணி மனம் நெகிழ்ந்தோம்.

 

திருச்செந்தூர் திருவிழாவுக்காக ஊமைதுரை, தானாதிபதிபிள்ளை, வீரன் சுந்தரலிங்கம் போன்றோர் திருச்செந்தூர் சென்றிருந்த சமயமான1799ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டது. அவ்வளவு விரைவில் ஆங்கிலப் படையெடுப்பை எதிர்பார்க்காத கட்டபொம்மன் மனம் தளராமல் திருச்செந்தூர் சென்றிருந்த படைகளைத் தவிர மீதம் இருந்த 1000 பேர் கொண்ட படையுடன் தீரத்துடன் போரிட்டார். பார்மென் தலைமையிலான ஆங்கிலேயப்படை பீரங்கிகளுடன் போரிட்டாலும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்திற்கு முன்னால் தோற்றுப்போனது. இதையறிந்ததும் ஊமைத்துரை விரைந்து வந்து பாஞ்சாலங்குறிச்சியில் தன் அண்ணனுடன் இணைந்துகொண்டார்.

 

பீரங்கிகளின் தாக்குதலால் பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை சிதிலமடைந்தது. வெற்றிபெற்றாலும் அடுத்த படையெடுப்பைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த கட்டபொம்மன், சில வேலைகளைத் தமது தளபதிகளில் ஒருவரான தானாதிபதி பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டுக் கோட்டையிலிருந்து வெளியேறினார். கோலார்பட்டியில் எட்டப்பனுடன் நடந்த சண்டையில் தானாதிபதிபிள்ளையும் நாகலாபுரம் பளையத்துக்காரர் செளந்திரபாண்டியும் சிறைப்பிடிக்கப்பட்டு, இருவரையும் தூக்கிலிட்டுக் கொன்றான் தளபதி பானர்மேன். அத்துடன் இல்லாமல்

தானாதிபதியின் தலையைத் துண்டித்து

அவரது உடல் நாகலாபுரத்திலும், தலை பாஞ்சாலங்குறிச்சியில் ஈட்டியில் குத்தப்பட்டும் மக்களின் முன்பாக வைக்கப்பட்டதாம்.

தன் மக்களுக்காகவும் தனது மன்னனுக்காகவும் தன் உயிரை இழந்த மாவீரர்தான் இந்த வீட்டில் வாழ்ந்த

தானாதிபதி சுப்பிரமணியபிள்ளை.

 

பின்னர் அதேவீதியின் இறுதியில் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தோம். தேநீர் அருந்திக்கொண்டே, “தானாதிபதிபிள்ளை வீட்டில் அவரது வாரிசுகள் யாராவது இப்போது இருக்கிறார்களா?” எனக்கேட்டோம்.

 

தேநீர்போடுபவர் உடனே அங்கு எங்களருகில் மரப்பெஞ்ச்சில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெரியவரைக் கைகாட்ட, நாங்கள் மிகவும் ஆச்சரியமடைந்தோம். அவர் தனது பெயர் உலகநாதன் என்றும், தானாதிபதிபிள்ளை தமக்கு “பூட்டன்” என்றும் கூறினார்.

தானாபதி பிள்ளையின் வாரிசு

இலக்கியங்கள், எழுத்துப்பதிவுகள், புத்தகங்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த உறவுமுறைச் சொல்லான “பூட்டன்” என்பதை ஒரு பெரியவர் வாயிலாகக் கேட்டது இதுவே முதல்முறை.

 

அடுத்தபதிவில் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டையில் தானாதிபதிபிள்ளைபற்றிய வேறு ஒரு குறிப்பை நாங்கள் கண்டதைக் காண்போம்!

 

– திருப்பூர். இரா. சுகுணாதேவி அவர்கள் பதிவில் இருந்து…

 

நன்றி

வை.பி.பாலகுமார்

சுதேசி செய்திகள்