வ.உ.சியின் சிறை வாழ்க்கை

 

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை அறிவோம்!…

வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு அவர் எழுதிய சுயசரிதத்தைத் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஒருவேளை அவர் தனது சுயசரிதத்தை எழுதாமல் போயிருந்தால் அவரது சிறை வாழ்க்கை குறித்து நம்மால் எதையும் அறிய முடியாமலேயே போயிருக்கும்.
விதிக்கப் பட்ட, 6 ஆண்டுகளில் மூன்று விசேஷ கால விடுதலைக்கான குறைப்புக் காலமாக ஒன்றரை ஆண்டுகள் போக மீதம் நான்கரை ஆண்டுகளுடன் ஏற்கெனவே விசாரணைக் கைதியாக 3 மாதங்களையும் சேர்த்து, ஆக மொத்தம் நான்கே முக்கால் ஆண்டுகளை வ.உ.சி. சிறையில் இழந்திருக்கிறார்.

கோவைச் சிறையின் கொடுமைகள்:

09.07.1908 முதல் 01.12.1910 வரை இருந்த கோவைச் சிறைவாசம்தான் வ.உ.சி.யின் சிறைவாசத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. வாழ்வின் மொத்த துன்பங்களையும் உடல் வேதனைகளையும் கோவைச் சிறையில் தான் அனுபவித்தார்.
அப்போதெல்லாம் தமிழ் நாட்டுச் சிறைகளில் தேச பக்தர்கள் தண்டனை அனுபவித்தது மிகக் குறைவே.
பணமும் படிப்பும் செல்வாக்குமிக்க ஒரு பெரிய தேசியத் தலைவர், கோவைச் சிறை வாழ்க்கையை பயங்கரமான நாலாந்தர கிரிமினல் கைதிகளுடன் ஆரம்பித்தார்.

வ.உ.சி க்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுங்காவல் தண்டனை என்பதால் சிறை விதிகளின் படி கடுமையான தண்டனைகள் அவருக்கு வழங்கப் பட்டன. ராஜத் துரோக தண்டனை என்பதால் அய்யாவின் கால்களில் விலங்கிடப் பட்டன. முரட்டுத் துணியில் பனியன் போல ஒரு சட்டை, அரைக்கால் டவுசர் கொடுக்கப்பட்டு கழுத்தில் தாலி போல ஒரு வட்டும் அணியச் சொன்னார்கள்.
சத்துள்ள காய்கறி மற்றும் சைவ உணவு சாப்பிட்டு வளர்ந்த அவரால் மடித்துப் புழு அரித்த கேழ்வரகு களி, கூழ் முதலியன சாப்பிட முடியவில்லை. தேகம் மெலியத் தொடங்கியது. தேகம் மெலிந்த ஒரு வக்கீலை சிறை அதிகாரிகள் ஈவு இரக்கமின்றி கடினப் பணிகள் கொடுத்தனர். முதலில் சணல் திரிக்கும் இயந்திரத்தை சுற்றினார். கைத் தோல்கள் உரிந்து ரத்தம் கசியும் அளவுக்கு அந்த தண்டனையின் கொடூரம் இருந்த்து.

அதன் பின்னர் தான் சண்டாளர்கள் அவரைச் செக்கில் பூட்டி இம்சிக்கும் வன் கொடுமை நிகழ்ந்தது..

சணல் இயந்திரத்தில் கையில் ரத்தம் வர வேலை செய்து வேதனைப்பட்டு அசந்து போய் இருந்தார் அய்யா.

வழக்குரைஞர் பணி அவரது குடும்பத்தில் வாழையடி வாழையாக வந்த பணி. அப்படிப் பட்டவரை வெள்ளைய சிறை அதிகாரிகள் மாடு போல செக்கின் நுகத் தடியைச் சங்கிலியால் பிணைத்து அந்தச் சங்கிலியை இடுப்பில் இறுகக் கட்டி, அதைக் கைகளில் பூட்டி அவரை இழுக்க வைத்து துன்புறுத்தினர். இரு கற்களால் ஆன எண்ணெய் ஆட்டும் செக்கினை பகலெல்லாம் வெயிலில் இழுக்கும் தண்டனை தரப்பட்டது. அவரை செக்கிழுக்கும் மாடு போல மாற்றி கொடுமை செய்தது சிறையதிகாரம்..

அதனால் ஒரு நாள் செக்கை மாடு இழுப்பது போல இழுக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டார். பின்பு, சக கைதிகள் ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்த பிறகு, மறுபடியும் செக்கில் பூட்டி இழுக்க வைத்தனர், கல் நெஞ்சுக் காரர்கள்.

இந்தக் காட்சி மற்ற கைதிகளின் மனதை வெகுவாக பாதித்த்து. அவர்கள் வ.உ.சி யிடம் ‘சிறை அதிகாரி மேற்பார்வையிட வரும் போது மட்டும் செக்கிழுத்தால் போதும்.’என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்த தண்டனை இருந்த்து.

 

அய்யா வ. உ. சி. அவர்கள், செக்கை இழுக்கும் போது, அவருக்கு செக்கிழுக்கும் நினைவே இருக்காதாம். சுதந்திர தேவியின் திருக் கோயிலைச் சுற்றி வலம் வருவது போல எண்ணிக் கொள்வாராம்.

 

வ.உ.சி யின் கை கால்கள் விலங்கிடப் பட்ட நிலையில் செக்கிழுத்த செய்தியை பாரதியார் ‘இந்தியா’ இதழில் வெளியிட்டார்.

 

‘மேலோர்கள் வெஞ்சிறையில்

வீழ்ந்து கிடப்பதும்

நூலோர்கள் செக்கடியில்

நோவதும் காண்கிலையோ’

 

என்று கடவுளிடம் முறையிட்டார்

 

சிறையில் பிற கைதிகள் மிகக் கேவலமாகவும் கொடுமையாகவும் நடத்தப்பட்டனர்.

அங்கு ஜெயிலராக இருந்தவர் மிஞ்ஜேல். தூத்துக்குடியில் கலெக்டர் ஆஷ் செய்த அக்கிரமங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல கோவைச் சிறையில் ஜெயிலர் மிஞ்ஜேல் நடத்திய அக்கிரமங்கள்.

சணல் பிரிக்கும் எந்திரத்தைச் சுழற்றியதில் வ.உ.சி.யின் கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்து கண்ணீர் வடித்திருக்கிறார். அதற்கு மாற்றாகத்தான் செக்கு இழுக்க வைக்கப் பட்டிருக்கிறார். அதைத் தடுத்த கைதிகளைத் தாக்கியிருக்கிறார் ஜெயிலர் மிஞ்ஜேல்.

அந்தச் சமயத்தில் நீதிபதி பின்ஹே வழங்கிய நாடு கடத்தல் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் தற்காலிமாக அந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கிறார் வ .உ.சி.