மாடசாமி பிள்ளை

மாடசாமி பிள்ளை

யார் இந்த மாடசாமி? திருநெல்வேலி சதி வழக்கில், கலெக்டர் ஆஷ் கொலை சம்பந்தமாகத் தேடப்பட்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தேசபக்தர். நெஞ்சுரம் மிக்கவர். ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவான இவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய்விட்டது. அவர் இருக்குமிடம் மட்டுமா தெரியாமல் போய்விட்டது. அவர் யார் என்பதே இன்றைக்குப் பலருக்குத் தெரியாமல் வரலாற்றில் முக்கிய இடம்பெறாமல் போய்விட்ட தியாகி அவர்.

ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போய்விட்டதாகப் போலீசார் சொல்லி வந்தனர். இவரது ஊர் ஒட்டப்பிடாரம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.பிறந்த ஊர். இந்தப் புனித பூமியில் பிறந்த மாடசாமி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டிருந்தது வியப்புக்குரியது அல்ல.

வீரர் மாடசாமி திரு வ.உ.சியின் தோழராகவும், சீடராகவும் இருந்து சட்டத்திற்குட்பட்ட முறையில் நடந்த சுதேசிக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவரும் ஆவார். தலைமறைவான பிறகு அவர் என்ன ஆனார்? செவி வழிச் செய்தியாக இவர் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி புதுச்சேரிக்குச் சென்று விட்டதாகச் சிலர் தெரிவித்தனர். அங்கு தங்கியிருந்த காலத்தில் இவருக்கு வ.வெ.சு.ஐயருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மாடசாமி குறித்து போலீசாரின் இரகசியக் குறிப்பு கூறும் செய்தி: “தூத்துக்குடி போலீஸ் துணை சுப்பரின்டெண்ட் ஜான்சன் தலைமறைவாகிவிட்ட மாடசாமிப் பிள்ளையைப் பிடிக்க எத்தனையோ முயன்றும் முடியவில்லை. அவரது வீட்டிலுள்ள பொருட்களையும் அவருக்குச் சொந்தமான நிலங்களையும் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியில் இவர் இருக்கிறார் என்ற செய்தி அறிந்த பிரிட்டிஷ் போலீசார் அவரை அங்கும் சென்று வேட்டையாடத் தயாராகினர். இந்தச் செய்தியறிந்த மாடசாமி அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்ற பிறகு அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்கிற விஷயங்கள் எல்லாம் மர்மமாகவே இருந்து வருகின்றன. ஒரு சமயம் அவரைக் கொழும்புவில் பார்த்ததாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பி உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் காலமாகி யிருக்க வேண்டும். இப்படிப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை என்னவென்பது? எப்படிப் போற்றுவது?

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள் “விடுதலைப் போரில் தமிழகம்” எனும் நூலில் மாடசாமி குறித்து எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார், “மாடசாமி கோழைத்தனத்தால் தலைமறைவாகி விடவில்லை. தண்டனைக்குப் பயந்தும் தப்பியோடவில்லை. அந்நாளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி, புரட்சிச் செயல்களில் ஈடுபடுவது புரட்சியாளரின் வேலை திட்டமாக இருந்தது. காந்திய சகாப்தம் பிறந்த பின்னர்தான் இந்த முறை பெருமை தரத் தக்கதல்ல என்று தேசபக்தர்களால் கருதப்பட்டது”.

திரு மாடசாமியைப் பற்றி அவர் சாந்திருந்த ‘அபிநவ பாரதம்’ எனும் புரட்சி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்து நடத்தி வந்தவரும், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கில் 7 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை பெற்றவருமான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுவதையும் ம.பொ.சி. தனது நூலில் குறிப்பிடுகிறார்.

“எனது புரட்சிப் படையில் மாடசாமி பிரதானமானவர். மகா தீரர்; சூரர்; வீரர்! இவரைப் போல உறுதியும் துணிவும் மிகுந்தவரைக் காண்பது அரிது. இவர் சகலகலாவல்லவர். எந்த நிமிஷத்திலும் எந்த வேஷத்தையும் போட்டுத் திறமையுடன் செயல்பட வல்லவர். போலீசாரைப் பல தரம் ஏமாற்றியுள்ளார். நெருங்கியவர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் காண இயலாது. அவ்வளவு சாமர்த்தியசாலி. ஒட்டப்பிடாரம்தான் இவரது சொந்த ஊர். திருமணமானவர். குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் இவர் புரட்சி வேள்வியில் குதித்து நீந்தினாரென்றால், இவரது ஆண்மையையும், உறுதியையும் என்னென்று புகழ்வது.”
(இந்தியச் சுதந்திரப் போர்)

ம.பொ.சி. அவர்கள் மாடசாமியின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி: “மாடசாமி தலைமறைவானபின் அவருடைய சொத்துக்களை யெல்லாம் நீதிமன்றத்தின் ஆணைப்படி அரசு பறிமுதல் செய்துவிட்டது. அதனால், கணவனைப் பிரிந்து அவரது மனைவி தம் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன பாடுபட்டாரோ? தேசபக்த மாவீரனுக்கு மக்களாகப் பிறந்த பாவத்திற்காக அந்தக் குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் எவ்வளவு காலம் அல்லலுற்றனவோ? அவர்களது தியாக வாழ்வுக்குத் திரை விழுந்து விட்டதே!”

மாசிலா மனத்து மானமிகு மாடசாமி கள்ளக் கடுதாசி போட்டு ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் அடிவயிற்றை கலக்கிய சிங்கமடா நீ. உன் வீரத்தை எவனறிவான் தமிழகத்தில். உன் வீரவரலாறு இனி அறியும் இத் தமிழகம்.

வ.உ.சி. என்னும் பாசறையில் உணர்ச்சி மிகு கொந்தளிப்பாய் புறப்பட்ட தோட்டா நீ. இந்த நாட்டுக்காக, உன்னை இழந்தாய். உன் குடும்பத்தை பாராமலே அலைந்து திரிந்தாய்.  ஆங்கிலேய அரசாங்கத்தில் பிடிபடாமல் இலங்கை, பர்மா, சைக்கோன் என பல நகரங்களில்  மாயக் கண்ணணாய் மறைந்து வாழ்ந்தாய்.

ஆனால் பெரியவர் வ.உ.சி. 1915 ல் புதுச்சேரி வந்த வேளையில் மட்டும்  மாயமாய் எல்லோருக்கும் டிகிக்கி கொடுத்த நீ அவருக்கு மட்டுமே காட்சி அளித்து சென்றாயே. நீ தானடா வீரன். மாவீரன்.

ஆஷ் கொலையுண்ட நாளுக்கு முன்பாகவே கலெக்டருக்கு எச்சரிக்கை கடுதாசி போட்டு விட்டு வீரவாஞ்சிநாதனிடம்  ஒரு விளையாட்டைப் போட்டு நீங்க இருவரும் மகிழ்ச்சிக்குள்ளான இடம் அபாரம். கொலையுறுவதற்கு முன்பாகவே ஒருவனை பயத்திலேயே இருக்க வைத்து மிரட்டிய சிங்கம் நீங்கள் ஓருவரே. அரசாங்கத்திற்கு நீங்க  காட்டிய போக்கு அட்டகாசம். புலி வேசத்தில் ஆடப் போவதாக அறிவித்து விட்டு பிரிட்டீசு போலீஸ்காரர்களை வரவழைத்து வேறொரு ஆளை ஏமாந்து போய் அவர்கள் பிடிக்க எப்படி எப்படியெல்லாம் ஆங்கிலேய காவல்துறையை திசை திருப்பித் திரிந்தாயே . சினிமா படத்தையும் மிஞ்சியது உன் அசாதாரணமான வீரவிளையாட்டு.

சுதந்திரம் அடைந்த பிறகாவது உங்கள் மனைவிக்கு மட்டும் காட்சி அளித்திருக்கலாம். ஈரோட்டு ஆஸ்பத்திரியில் ஏதோ சாமியார் மாதிரி வந்து ஒரு சன்னல் ஓரத்தில் உங்கள் மனைவி துக்கத்தில் அமர்ந்திருக்க படுக்கையில் கிடந்த மகனை தூரத்தில் பார்த்து விட்டு ஒழுகிய கண்ணீருடன்  சில கணங்களில் மனைவிக்கு கூட காட்சி அளிக்காமல் மறைந்து விட்டாயே. உங்கள் மனைவி சிதம்பரத்தம்மாள் பட்டபாடெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் கதை.

சென்னை பிராட்வே ஸ்டிரிங்கர்ஸ் வீதியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வந்து உங்களது உடைமைகளை மட்டும் பெற்றுக் கொண்டு உங்க சகலை கூட இருந்த போதும் சைகையால் பார்த்து விட்டு அடுத்த நிமிடத்தில் மீண்டும் மாயாமாய் மறைந்து விட்டீர்களே. அந்த வீதிக்கு நான் சென்று உங்க பாதம் பட்ட இடத்தை தேடி ஆத்மார்த்தமாக உங்கள் நினைவுடன் அலைகிறேன்.

 

பெரியவர் வ.உ.சி.உடன் சம்பந்தப்பட்ட அனைவருமே தங்களை முற்றிலும் அழித்துக் கொண்டவர்கள் பட்டியலில் நீங்கள் ஒரு படி மேலே. பாரதிதாசன் எழுதுவான். மாசிலா மனத்து மாடசாமியை கடலில் சென்று சைகோன் கப்பலில் ஏற்றி விட்ட பிறகு பலமுறை செத்து செத்து பிழைத்தேன் என குறிப்பிடுகிறார். உன் வீரத்தை அறியுமா இந்த தமிழகம். எவன் எவனோ இங்கு வீரர்களாம். உன் வீரத்தை, தியாகத்தை அரிச்சுவடி கூட அறியாத இந்த நன்றி கெட்ட தமிழகத்தை நினைக்கும் போது உள்ளம் குமுறுகிறது. பெரியவர் வ.உ.சி.யின் புகழ் இருக்கும் வரை உங்கள் புகழும் இருக்கும்.

இந்த நாளில் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கத்தை மானமிகு மாடசாமி அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.