V O Chidhambaram Pillai

 

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை அறிவோம்!
————————————–
செப்-5 தமிழகத்தின் மகத்தான விடுதலைப் போராளி வ.உ.சி பிறந்த நாள்!
—————————————–

வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு அவர் எழுதிய சுயசரிதத்தைத் தவிர வேறு எந்த ஒரு ஆவணமும் இல்லை.

ஒருவேளை அவர் தனது சுயசரிதத்தை எழுதாமல் போயிருந்தால் அவரது சிறை வாழ்க்கை குறித்து நம்மால் எதையும் அறிய முடியாமலேயே போயிருக்கும்.

திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இ.பி.கோ. பிரிவு 108-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுப் பின்னர் அது பிரிவு 107(4) ஆக மாற்றப்பட்டது. அவ்வழக்கை விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

நன்னடத்தைக்காகச் செலுத்தச் சொன்ன பிணைத் தொகையை முதலில் கட்ட மறுத்து, பின்னர் ஒப்புக் கொண்ட போதும் அதை ஏற்க மறுத்துத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார் நீதிபதி விஞ்ச்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவின் மீது மூவர் சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கே விஞ்ச்சின் உத்தரவு மறுக்கப்பட்டு வழக்கும் ரத்துசெய்யப்பட்டது. அதற்கான உத்தரவு நெல்லை வந்தும்கூட பத்மநாப அய்யங்காரை மட்டும் விடுவித்துவிட்டு வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தலா இரண்டு வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன.

இரண்டு புதிய வழக்குகள்:

சுப்ரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பிரிவு – 124 ஏ, (தேச துரோகம்) அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியதாகப் பிரிவு – 153 ஏ ஆகிய இரண்டு வழக்குகள் வ.உ.சி. மீது பதிவுசெய்யப்படுகின்றன.

மூன்று மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இரண்டு வழக்குகளுக்கும் (20+ 20) நாற்பது ஆண்டு காலம் தண்டனை. அதை ஒன்றன் பின் ஒன்றாக அந்தமான் சிறையில் தீவாந்திரக் கடுங்காவல் தண்டனையாக வ.உ.சி. கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தத் தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அங்கு நாற்பது ஆண்டு காலத் தண்டனையானது (4 + 6) பத்து ஆண்டு காலம் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.

அதன் பின்னர் லண்டன் பிரிவியூ கவுன்சிலில் செய்யப்பட்ட முறையீட்டால் நாடு கடத்தல் ரத்துசெய்யப்பட்டு 10 ஆண்டுகளையும் ஒரே சமயத்தில், அதாவது 6 ஆண்டுகளுக்குள் 4 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 6 ஆண்டுகள் அனுபவிக்குமாறு குறைக்கப்படுகிறது.

6 ஆண்டுகளில் மூன்று விசேஷ கால விடுதலைக்கான குறைப்புக் காலமாக ஒன்றரை ஆண்டுகள் போக மீதம் நான்கரை ஆண்டுகளுடன் ஏற்கெனவே விசாரணைக் கைதியாக 3 மாதங்களையும் சேர்த்து, ஆக மொத்தம் நான்கே முக்கால் ஆண்டுகளை வ.உ.சி. சிறையில் இழந்திருக்கிறார்.

சிறையில் முதல் நாள் அனுபவம்:
——————————-

12.03.1908 மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டைச் சிறைக்குள் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் நுழைகிறார்கள். நுழைந்ததுமே பிரச்சினை தொடங்குகிறது.

“காலையிலிருந்தே நீங்களெல்லாம் வருவீர்களென்று எதிர்பார்த்திருந்தேன், அப்பா, மகன், பேரன் மாதிரி மூணு பேரும் வந்திருக்கீங்க, புத்தியோடு இருங்க” என நக்கலாக வரவேற்கிறார் ஜெயிலர். அதற்கு “நீ ஒத்து வந்தீன்னா சரிதான்” எனப் பதிலுக்கு நக்கல் செய்கிறார் வ.உ.சி.

சிறைக் கண்காணிப்பாளர் வ.உ.சி.யைப் பார்த்துவிட்டு, “உன்னயப் பாத்தாக் கைதி மாதிரியே தெரியலியே, கைதியாகவே நீ உன்ன நெனைக்கல போலருக்கே” என்று அதட்டலாகக் கேட்கிறார். அதற்கு “நீ சொன்னது? உண்மைதான். நான் சொல்லவந்ததைக் கேள்” என்கிறார். சிறை அதிகாரிகளின் அதிகாரத் திமிருக்குப் பணிந்துவிடாமல் எதிர்த்து நிற்கும் போக்கு முதல் நாளிலிருந்தே தொடங்கிவிடுகிறது.

கோவைச் சிறையின் கொடுமைகள்:

09.07.1908 முதல் 01.12.1910 வரை இருந்த கோவைச் சிறைவாசம்தான் வ.உ.சி.யின் சிறைவாசத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கு ஜெயிலராக இருந்தவர் மிஞ்ஜேல். தூத்துக்குடியில் கலெக்டர் ஆஷ் செய்த அக்கிரமங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல கோவைச் சிறையில் ஜெயிலர் மிஞ்ஜேல் நடத்திய அக்கிரமங்கள்.

சணல் பிரிக்கும் எந்திரத்தைச் சுழற்றியதில் வ.உ.சி.யின் கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்து கண்ணீர் வடித்திருக்கிறார். அதற்கு மாற்றாக செக்கு இழுக்க வைக்கப் பட்டிருக்கிறார். அதைத் தடுத்த கைதிகளைத் தாக்கியிருக்கிறார் ஜெயிலர் மிஞ்ஜேல்.

அந்தச் சமயத்தில் நீதிபதி பின்ஹே வழங்கிய நாடு கடத்தல் தண்டனை ரத்துசெய்யப்பட்டதால் தற்காலிமாக அந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கிறார் வ .உ.சி

கோவைச் சிறையில் நடந்த கைதிகளின் போராட்டமும், அதற்கு நீதிமன்றத்தில் வ.உ.சி. சொன்ன துணிச்சலான சாட்சியமும், அவ்வாறு சொன்னதற்காக காங்கிரஸ் கட்சியால் அவர் கண்டிக்கப்பட்டதும் அவரது வரலாற்றில் மிகவும் முக்கியமானவை.

சிறைக் கைதி ஒருவர் தனது தலைக்கு மேலாக இருகரங்களையும் கூப்பி வ.உ.சி.யை வணங்கினார். இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத ஜெயிலர் மிஞ்ஜேலால் தொடங்கப்பட்ட பிரச்சினையானது கைதிகளின் போராட்டமாக மாறி, அதை அடக்கச் செய்த முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழக்க, இறுதியில் மிஞ்ஜேலை ஸ்டிரச்சரில் வைத்துத் தூக்கிச் செல்லும் நிலையில் முடிந்தது. அவர் அதனால் துணை ஜெயிலராகப் பதவியிறக்கமும் பெற்றார்.

நாற்பது ஆண்டு தண்டனைக் காலமானது பத்து (4+ 6) ஆண்டுக் காலம் சேர்த்து அனுபவிக்கும் கடுங்காவலாக மாற்றப்பட்டது.

மிஞ்ஜேலும் சிறைக் கண்காணிப்பாளர் காட்சனும் மீண்டும் அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். சிறைக் கலவரம் குறித்து விசாரிக்க வந்த சிறைத் துறை ஐ.ஜி.யிடம் இருவரது அட்டூழியங்கள் குறித்தும் நேரடியாகப் புகார் சொன்னார் வ.உ.சி.

அரசியல் கைதிகளை முறையாக நடத்துங்கள் என, ஐ.ஜி. இருவரையும் கண்டித்தார். இதனால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற இருவரும் வ.உ.சி.க்கு மனரீதியான உளைச்சலைக் கொடுத்து ஒடுக்க முயல்கிறார்கள்.

சிறை வளாகத்தைக் கூட்டிப் பெருக்கவும் மூத்திரச்சட்டியை எடுத்துப்போகவும் சட்ட விரோதமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.

வ.உ.சி.யின் உணவுப் பழக்கத்துக்குச் சிறையில் ஏற்பட்ட நெருக்கடி களைக் குறித்து நமக்குத் தெரியவருவதே அவரது சுயசரிதத்திலிருந்துதான். அவர் நினைத்திருந்தால் அதை மறைத்திருக்கவோ அல்லது மாற்றி எழுதியிருக்கவோ முடியும். அவர் வெளிப்படையாக எழுதியிருப்பதன் நோக்கம் ஆங்கிலேயர்கள் தனக்கு ஏற்படுத்திய நெருக்கடிகளைத் தெரியப்படுத்தத்தானே தவிர தனது உணவுப் பழக்கத்தின் மீது அவர் கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்துவதற்கு அல்ல.

முற்றியது மோதல்:

ஒருநாள் வ.உ.சி.க்குப் புத்திமதி சொல்ல முயன்றார் மிஞ்ஜேல். “உனக்கும் உன்னப்பனுக்கும் உன் சூப்பிரண்டிற்கும் உனையாளும் கவர்னருக்கும் புத்தி சொல்லும் தகுதி எனக்குண்டு” எனக் கூறுகிறார் வ.உ.சி. அதனால், 15 வாரங்கள் அபராதம் என அறிவிக்கிறார்கள்.

ஆனால், ஒரே வாரத்தில் அவர் கண்ணனூருக்கு மாற்றப்படுகிறார். 01.12.1910 முதல் 24.12.1912 வரை கேரளத்தின் கண்ணனூரில் இருந்த 2 வருடங்கள் 22 நாட்களில் பெரிய அளவில் அவருக்குத் துன்பங்கள் தரப்படவில்லை.

கோயமுத்தூர்போலவே இங்கும் ஆய்வுக்கு வந்த ஐ.ஜி.யிடம் அவர்களின் நடத்தைகளைச் சொல்கிறார் வ.உ.சி. அதனால், ஐ.ஜி. அவருக்கு எழுத்துக் கோக்கும் வேலையைத் தர உத்தரவிட்டார்.

‘மெய்யறிவு’, ‘மெய்யறம்’ இரு நூல்களையும் அப்போதுதான் எழுதினார்.

24.12.1912 அன்று வ.உ.சி. விடுதலையானார். சிறைக்குள் நுழையும்போது அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது சிறையிலிருந்து விடுதலையாகும் அவரை வரவேற்க நான்கு பேர் மட்டுமே காத்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் எந்த நோக்கத்துக்காக வ.உ.சி.யைச் சிறைக்கு அனுப்பினார்களோ அந்த நோக்கத்தை அவர்கள் ஈடேற்றிக்கொண்டனர்.

வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையை எத்தனை முறை படித்தாலும் நாம் மீண்டும் மீண்டும் உணர்வது ஒன்றைத்தான்: ‘அதிகாரத்துக்கு அடிபணியாமை’. சிறை வாழ்க்கையில் எந்த இடத்திலும் அவர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை.

அய்யா வ.உ.சி அவர்கள் மனம் வருந்தித் துடித்தபோதும் அதிகாரத்துக்குத் தலைவணங்கவில்லை.

மொத்தத்தில், அவரது சிறை வாழ்க்கை வெளிக்காட்டுவது அவரது கொள்கைப் பற்றால் உருவான வீரம் செறிந்த எதிர்ப்பு உணர்வைத்தான்.

* அய்யா வ.உ.சி -க்கு வீரவணக்கம்!